;
Athirady Tamil News

பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

0

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் ஒப்புதல் அளித்து உள்ளது. இதையடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கருத்துக்களை அறியாமல் தமிழக அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடல் வளமும் பாதிப்படையும். மேலும் கடலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள 32 மீனவ கிராமத்தினர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

இதை கருத்தில் கொண்டு கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்க தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷண்கவுல், சுதன்துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.