பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- மாற்று தேதி அறிவிப்பு!!
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் இன்னமும் தயங்குகிறார்கள். எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை பீகார் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அப்போது தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜூலை 13, 14-ம் தேதிகளில் பெங்களூருவில் அடுத்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.