பிரதமர் மோடி இன்று ஆலோசனை- 15 மந்திரிகளை கட்சி பணிக்கு அனுப்ப முடிவு?
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராக தொடங்கி இருக்கிறது. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு வியூகங்களை வகுத்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் போல் அல்லாமல் அதிக அளவில் கூட்டணி வைப்பதற்கு மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக பல்வேறு மாநில கட்சிகளிடமும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பாரதிய ஜனதாவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். இதற்காக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய கடந்த சில தினங்களாக மோடி ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடி பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் இறுதி கட்ட ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மந்திரி சபையில் பெரிய அளவில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகளில் யார்-யாரை கட்சி பணிக்கு அனுப்புவது என்பது பற்றி தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
மத்திய மந்திரிகளில் யார்-யாருக்கு எந்தெந்த மாநில தேர்தல் பொறுப்புகளை பகிர்ந்து வழங்குவது என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது. அது போல கட்சி பணிக்கு செல்லும் மந்திரிகளுக்கு பதில் புதிய மந்திரிகளாக யார்-யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது பற்றியும் பேசப்படுகிறது. கடந்த சில தினங்களாக நடந்து வரும் ஆலோசனையின் அடிப்படையில் சுமார் 15 மத்திய மந்திரிகள் நீக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய மந்திரிகள் வி.கே.சிங், ரூபாலா, பீரேந்திரகுமார், அஸ்வினி குமார் சவ்பே, தர்மேந்திர பிரதான், பியூஸ்கோயல், கிரிராஜ்சிங், பசுபதி குமார் பரஸ், நரேந்திர தோமர், மகேந்திர பாண்டே, அஜய் மிஸ்ரா ஆகியோர் கட்சி பணிக்கு அனுப்பப்படக்கூடும் என்று தெரிகிறது. இவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கனவே கலந்து பேசி விட்டதாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மத்திய மந்திரிகள் கட்சி பணிக்கு செல்ல சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த அமைச்சரவை மாற்றம் அவசியம் என்பதால் பா.ஜ.க. மூத்த மந்திரிகளும் இதை ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரியவந்து உள்ளது. சுமார் 15 பா.ஜ.க. மத்திய மந்திரிகள் கட்சி பணிக்கு செல்லும் நிலையில் 12 புதுமுகங்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. கூட்டணி கட்சிகள் மற்றும் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய மந்திரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இருந்து தலா ஒரு புதுமுகம் மத்திய மந்திரி சபையில் இடம்பெற வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் இருந்து 2 பேருக்கு மத்திய மந்திரிகளாகும் வாய்ப்பு கிடைக்கலாம்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசில் இருந்து எம்.பி.க்கள் பிரிந்து வந்து பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களில் பிரபுல்படேலுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2 பேர் மகாராஷ்டிராவில் இருந்து மத்திய மந்திரிசபையில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. பீகாரில் இருந்து 2 அல்லது 3 பேர், தெலுங்கானாவில் இருந்து 2 பேருக்கு மத்திய மந்திரியாக வாய்ப்புள்ளது. இவை தவிர தென் இந்திய மாநிலம் ஒன்றில் இருந்தும் ஒருவருக்கு மத்திய மந்திரியாகும் வாய்ப்பு கிடைக்கலாம். ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிரக்பஸ்வான் மத்திய மந்திரியாகக்கூடும்.
பா.ஜ.க. மந்திரிகளில் சஞ்சய் காந்தி, சி.பி.ரவி, ஜனார்த்தன் சிங், விவேக் தாகூர், சி.பி.பட்டேல், ராஜ்யவர்தன் சிங்ரத்தோர் ஆகியோருக்கும் மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று தெரிகிறது. பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்ததும் மத்திய மந்திரி சபை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.