வெளி மாநிலங்களிலும் பொள்ளாச்சி இளநீருக்கு அதிக மவுசு- 5 மாதத்தில் 6 கோடி காய்கள் ஏற்றுமதி!!
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் செவ்விளநீர், பச்சை இளநீருக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமோக கிராக்கி உள்ளது. எனவே அங்கு வசிக்கும் விவசாயிகள் தென்னை தோட்டங்களில் இளநீர்களை அறுவடை செய்து, வெளியூர்-வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தற்போது ஒரு இளநீர் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் விளையும் இளநீர் சற்று பெரிதாக இருக்கும். அதில் சுவை மிகுந்த தண்ணீர் அதிகம் இருக்கும்.
இது உடல்வெப்பத்தை தணிக்கும் இயற்கை அருமருந்து. எனவே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளிலும் பொள்ளாச்சி இளநீருக்கு அதிக மவுசு உண்டு. எனவே பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டரப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தோட்டங்களில் இளநீரை அறுவடை செய்து லாரிகள் மூலம் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
கடந்த 5 மாதங்களில் மட்டும் 6 கோடி இளநீர்கள் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து பொள்ளாச்சி விவசாயிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு-தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக இருந்தது. எனவே தமிழகத்தில் இளநீர் விற்பனை சரிந்தது. இதனால் அப்போது ஒரு இளநீரின் கொள்முதல் விலை ரூ.17 ஆக இருந்தது. ஆனால் நடப்பாண்டு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொள்ளாச்சி இளநீர் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்வரை பொள்ளாச்சி இளநீர் ஏற்றுமதி தொடரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.