;
Athirady Tamil News

பாகிஸ்தானுக்கு ஜாக் மா திடீர் பயணம்: பொருளாதாரத்தை நிமிர்த்த வழிவகுக்கும் முயற்சியா?

0

இணையதள வர்த்தக விற்பனையில் முன்னணியில் உள்ள சீனாவின் பன்னாட்டு நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும், உலகின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, ஜூன் 29 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்து அங்கு 1 நாள் தங்கியும் இருந்திருக்கிறார் எனும் செய்தி வெளிவந்திருக்கிறது. பாகிஸ்தானின் முதலீட்டு வாரியத்தின் (BOI) முன்னாள் தலைவர் முஹம்மது அஸ்பர் அஹ்சன், ஜாக் மா ஜூன் 29 அன்று லாகூர் வந்து 23 மணி நேரம் தங்கியதாகவும், அவர் வருகையின் நோக்கம் ரகசியமாக இருக்கும். அதேவேளையில் வரும் நாட்களில் இது பாகிஸ்தானுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அஹ்சன் நம்புவதாக செய்திகள் தெரிவிக்கினறன. மாவின் வருகை கண்டிப்பாக தனிப்பட்ட நோக்கங்களுக்காக என்று தெளிவுபடுத்திய அஹ்சன், சீனத் தூதரகத்திற்கு கூட ஜாக் மாவின் வருகை குறித்த விவரங்கள் தெரியாது என ட்வீட் செய்திருக்கிறார்.

ஜாக் மாவின் வருகையின்போது, அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து விட்டதாகவும், அவர் ஒரு தனியார் இடத்தில் வசித்ததாகவும், ஜெட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான VP-CMA என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் ஜெட் மூலம் ஜூன் 30 அன்று புறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 5 சீனர்கள், 1 டென்மார்க நாட்டு தனிநபர் மற்றும் 1 அமெரிக்க குடிமகன் அடங்கிய 7 தொழிலதிபர்கள் கொண்ட குழுவும் ஜாக் மா உடன் சென்றிருக்கிறது. அவர்கள் நேபாளத்தில் இருந்து ஹாங்காங்கின் வணிக விமானப் பிரிவில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்ததாக தெரிகிறது. சில நாட்களாகவே மா மற்றும் அவரது குழுவினர், பாகிஸ்தானில் வணிகம் செய்ய வாய்ப்புகளை ஆராய்வதாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

அவ்வாறு அவர் வரும்பொழுது பல்வேறு வர்த்தக சபைகளைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களையும், அதிகாரிகளையும் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் இந்த சந்திப்பில், எந்தவொரு குறிப்பிட்ட வணிக ஒப்பந்தமும் செய்யப்பட்டதாகவோ அல்லது சந்திப்பு நடந்ததாகவோ எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை. பாகிஸ்தானின் மென்பொருள் துறை சங்கத்தின் (P@SHA) தலைவர் ஜோஹைப் கான் கூறியதாவது:- இது ஜாக் மாவின் தனிப்பட்ட வருகையாக இருந்தாலும், சுற்றுலா கண்ணோட்டத்தில் பாகிஸ்தானின் நற்பெயரை அதிகரிக்க உதவியது.

பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப உலகில் அவரது அனுபவத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றிருந்திருக்கலாம்.” என்றார். வீழ்ச்சியடைந்து வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தாலும், அங்கு அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் பின்னணியிலும், ஜாக் மாவின் இந்த வருகை பல யூகங்களுக்கு வழி செய்திருப்பதால், பொருளாதார வல்லுனர்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.