தாமரை பறிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்!!
தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் – நவகத்தேகம கொன்கடவல குளத்தில் இருந்தே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நவகத்தேக, கொன்கடவல பகுதியைச் சேர்ந்த தென்னகோன் முதியன்சேலாகே சிறிசேன (வயது 60) என்பவரே மரணித்துள்ளார். இவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
தனது ஒரே பிள்ளையான 25 வயதுடைய மகன் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வைத்திய தேவைக்காக தாமரை மலர்கள் தேவைப்பட்டதால், அதனை பறிப்பதற்காக நவகத்தேகம கொன்கடவல குளத்திற்கு சென்ற போதே அவர் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த வைத்தியத்துக்குத் தேவையான தாமரை மலர்கள் மட்டுமே பறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், மேலும் தேவையான அனைத்து பொருட்களும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குடும்பஸ்தர் தாமரை மலர்களை பறிப்பதற்காக தனது வீட்டிலிருந்து குளத்துக்குச் சைக்கிளில் வந்ததாகவும், பின் தனது சைக்கிளை குளத்திற்கு பக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்துவிட்டு பூ பறிக்க சென்றதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் குறித்த நபர் வருகை தராத்தால், அந்த பகுதியில் உள்ள மக்கள் குளத்தில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, அந்த நபர் உயிரிழந்த நிலையில் சேற்றுக்குள் புதையுண்டு காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.