;
Athirady Tamil News

தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டையில் மன்னருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? !!

0

தென்னாப்பிரிக்காவின் ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகத்தில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மன்னரின் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெறுவதில் அசௌகரியமாக உணர்ந்ததால், அவர் எஸ்வதினி நாட்டில் மருத்துவ உதவியை நாடியதாக பிரதமர் மங்கோசுது புத்தலேசி கூறினார். எஸ்வதினி என்பது தென்னாப்பிரிக்காவுக்கு உள்ளே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும்.

இது அவரது மூத்த ஆலோசகர்களில் ஒருவரின் திடீர் மரணத்துக்கு விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், மன்னருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் மன்னரி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மன்னரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

அதேநேரத்தில், மன்னர் தற்போது மருத்துவமனையில் இல்லை. “தேவையற்ற பீதியை” உருவாக்கக்கூடாது என்று இளவரசர் ஆப்பிரிக்கா ஜூலு கூறியுள்ளார். இது தலைமை அமைச்சர் புத்தேலிசியின் அறிக்கைக்கு மறைமுக எதிர்ப்பாகத் தோன்றுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் முன்னிலையில் மன்னர் மிசுசுலு முடுசூட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் முன்னிலையில் மன்னர் மிசுசுலு முடுசூட்டப்பட்டார்.

ஆனால் 48 வயதான மன்னரின் கடும்பத்துக்குள்ளேயே அந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்கு கொடூரமான சண்டைகள் நடந்தன. அத்தகைய சண்டைகள் இன்னும் தொடருவதாகவே கருதப்படுகிறது.

ஜுலு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒரு பழங்குடி இனம். அதற்கென தனி நாடோ, எல்லையோ இப்போது இல்லை. ஆனாலும் தென்னாப்பிரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்துவதுடன், ஜூலு இன மக்களுக்கு தலைவராகவும் கருதப்படுகிறார்.

தென்னாப்பிரிக்க அரசிடமிருந்து கிடைக்கும் பெரும் நிதியுதவியும் ஜூலு மன்னரின் செல்வாக்குக்கு மிக முக்கியமான காரணம்.

48 வயதான மிசுசுலு, முந்தைய மன்னரின் மகன். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர், அவர் முறையான வாரிசு இல்லை என்றும் மறைந்த மன்னரின் உயில் போலியானது என்றும் வாதிட்டதால் வாரிசு சண்டை உருவானது. இதையும் தாண்டி கடந்த ஆண்டில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

மறைந்த மன்னர் ஸ்வேலிதினிக்கு ஆறு மனைவிகள், குறைந்தது 26 குழந்தைகள் இருந்தனர். மற்றொரு மகன் இளவரசர் சிமகடே மன்னராக வேண்டும் என்று இன்னொரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

மிசுசுலு மன்னருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தின் பின்னணியில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக எந்தக் கருத்தும் இல்லை.

தென்னாப்பிரிக்க காவல்துறை இன்னும் கூற்றுக்கள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

அரசர் மிசுசுலுவின் மூத்த உதவியாளர் டக்ளஸ் சபா, “திடீரென்று மயங்கி விழுந்ததாகவும், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும்” தனது அறிக்கையில், தலைமை அமைச்சர் புத்லெசி கூறினார்.

“இதைத் தொடர்ந்து மன்னருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது” என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டது.

“அவர் உடனடியாக எஸ்வதினியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெறுவதில் மன்னருக்கு தயக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அவரது பெற்றோர் இருவரும் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தனர்,” என்று தலைமை அமைச்சர் புத்லெசி கூறினார்.

ஜுலு சிம்மாசனத்திற்கு முறையான அரசியல் அதிகாரம் ஏதும் இல்லை. தனியாக நாடு என்பதும் கிடையாது. ஆனால் தென்னாப்பிரிக்காவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஜூலு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் மன்னருக்கு செல்வாக்கு எப்போதும் உண்டு. ஜுலு இனத்தில் முடியாட்சியானது ஆண்டுக்கு 4.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வரி செலுத்தும் மக்கள் தொகையைக் கொண்டது.

ஜுலு ராஜ்ஜியம் கடந்த காலங்களில் ஒரு பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. இது 1879-ஆம் ஆண்டு நடந்த இசண்டல்வானா போரின் போது பிரிட்டிஷ் படைகளை தோற்கடித்ததற்காக உலகப் புகழ் பெற்றது.

இந்தப் பெருமைக்காகவே இதன் மன்னராவதற்கு போட்டி கடுமையாக இருக்கும். வாரிசுப் போர்கள் கொடூரமாக நடக்கும். சில சமயங்களில் ரத்தக் களரியாகிவிடும்.

புகழ்பெற்ற மன்னர் ஷாகா கா சென்சங்ககோனா 1816 -ஆம் ஆண்டில் அரியணையைக் கைப்பற்றுவதற்காக தனது சகோதரனைக் கொன்றார். அது அவருக்குமே நடந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகன் சூழ்ச்சி செய்து அவரைப் படுகொலை செய்தார்.

தற்போது மன்னராக இருக்கும் மிசுசுலு கா ஸ்வெலிதினியும் எளிதாக முடியைக் கைப்பற்றிவிடவில்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்த அவரது தந்தை குட்வில் ஸ்வெலிதினியின் இடத்தைப் பிடிப்பதற்காக மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் போட்டியிட்டார்கள்.

மூத்த ஆலோசகர்களில் ஒருவரின் திடீர் மரணத்துக்கு விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், மன்னருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மன்னர் குடும்பத்தில் பல பிரிவுகள் இருந்தன. ஏனென்றால் மறைந்த மன்னருக்கு ஆறு மனைவிகள். அவர் அரை நூற்றாண்டாக்கும் மேலாக அரியணையில் இருக்கும்வரை அவை வெளிப்படையாக மோதிக் கொள்ளவில்லை.

ஆறு மனைவிகள் அல்லவா? அதனால் மறைந்த மன்னரே யாரை வாரிசாக அறிவிப்பது என்பதில் குழம்பித்தான் போயிருந்தார்.
இந்த மன்னர் பதவிக்கு யாரெல்லாம் சண்டையிட்டார்கள்?

இப்படியொரு சூழலில் மூன்றாவது மனைவியான ராணி மாண்ட்ஃபோம்பிக்கு அடுத்த வாரிசைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பைக் கொடுக்கும் வகையில் ஓர் உயில் மன்னர் பெயரில் எழுதப்பட்டிருந்தது.

ராணி மன்ட்ஃபோம்பி மறைந்த மன்னரின் மனைவிகளில் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் அரச குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் ஜுலு இல்லாத வேறு ஒரு பழங்குடி இனம்.

ஜுலு இனத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளும்போதே, அவருடைய முதல் மகனுக்கு வாரிசுரிமையில் முதல் இடம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் மன்னர் குட்வில் ஸ்வெலிதினி மறைந்ததும் மூன்றாவது மனைவியின் மகனான மிசுசுலு ஸ்வெலிதினியே மன்னராகப் போகிறார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தபடி ராணியும், மிசுசுலிவின் தாயுமான மன்ட்ஃபோம்பியும் அதையே தனது விருப்பமாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் மறைந்த மன்னரின் மகன்களில் மேலும் இருவர் அரியணைக்கு உரிமை கோரினர். அதனால் அரச குடும்பம் மூன்றாகப் பிளவுபட்டது. மிசுசுலு கா ஸ்வெலிதினி, சிமாகடே கா ஸ்வெலிதினி, புஸாபஸி கா ஸ்வெலிதினி ஆகிய மூன்று இளவரசர்களும் மன்னராவதற்குப் போட்டியிட்டனர்.

இந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக்க அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது. மிசுசுலு கா ஸ்வெலிதினியை புதிய ஜுலு மன்னராக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். அதை மிசிசுலுவின் சகோததர் எம்போனிசி எதிர்த்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. முடிசூட்டுவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கிவிட்டது.

இதன்படி மிசுசுலுவின் பாரம்பரிய முடிசூட்டு விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் மன்னரின் மூத்த மகனுமான சிமகடேவை புதிய மன்னர் என்று அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அறிவித்தார்கள். அதற்கு கணிசமான அரச குடும்ப ஆதரவும் இருந்தது.

மன்னரின் முதல் மகன் என்பதால் அவர்தான் இயற்கையான தேர்வு என்று அவரை ஆதரித்தவர்கள் கூறினார்கள்.

பழங்குடி இனங்களுக்கு இடையேயான பகைமையும் இந்த பதவிச் சண்டைக்கான காரணமாக இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள். ஏனென்றால், தற்போதைய மன்னர் மிசுசுலு நூறு சதவிகிதம் ஜுலு இனத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவரது தாய் எஸ்வாதினி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மன்னரின் முழுமையான மனைவியாக ஏற்கவில்லை.

தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை கறுப்பினத்தவர் பெரும்பான்மையினர் என்றாலும் அவர்கள் அனைவரும் ஒரே பண்பாட்டையோ, மொழியையோ கொண்டவர்கள் அல்லர். பல்வேறு இனக் குழுக்கள் அவர்களிடையே இருக்கின்றன. ஜுலு, ஷோசா, பசோதோ, டிஸ்வானா உள்ளிட்டவை அதில் அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.