;
Athirady Tamil News

ஃபிரான்ஸில் வாகனத்தை தடுக்கும்போது போலீஸார் துப்பாக்கியைப் பயன்படுத்துவது ஏன்?!!

0

ஃபிரான்ஸில் 17 வயது சிறுவன் நஹெல் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

நஹெலின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மாதிரியாக ஃபிரான்ஸில் கடந்த வருடம் மட்டும் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் இது மூன்றாவது சம்பவம். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கறுப்பினத்தவர்களாகவோ அல்லது அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களாகவோ உள்ளனர் என்கிறது ராயட்டர்ஸ் செய்தி முகமை.

சந்தேகத்துக்கு இடமான அல்லது அத்துமீறிச் செல்லும் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதே ட்ராஃபிக் ஸ்டாப் எனப்படுகிறது.

அந்த நேரத்தில் வாகனத்தையும், அதை ஓட்டி வந்த நபரையும் காவல்துறையினர் தற்காலிகமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகப் பொருள்.
வாகனத்தை தடுத்து நிறுத்தும்போது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கும் சட்டம்

ஃபிரான்ஸில் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால், அங்கு போலீஸார் ஆபத்து சூழ்நிலைகளில் துப்பாகியை பயன்படுத்தலாம்.

அதாவது ஓட்டுநர், போலீஸாரின் ஆணையை மதிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாலோ அல்லது அந்த போலீஸ் அதிகாரிக்கோ அல்லது பிறருக்கோ ஆபத்து விளைவிப்பது போன்று தோன்றினாலோ துப்பாக்கிச் சூடு நடத்த சட்டம் அனுமதிக்கிறது.

ஃபிரான்ஸின் மனித உரிமை அமைப்பு நஹெலின் கொலை குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த வருடத்திலிருந்து பார்த்தால் இம்மாதிரியான விசாரணை தொடங்கப்பட்டிருப்பது இது ஆறாவது முறை.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸின் புறநகர் பகுதிகளில் பதற்றநிலை ஏற்படுவது ஒன்றும் புதியதல்ல. அங்கு வேலைவாய்ப்பின்மை பிரச்னை அதிக அளவில் நிலவி வருகிறது. மேலும் குற்றவியல் சம்பவங்கள் நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

காவல்துறையினரும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

2016ஆம் ஆண்டில் பாரிஸின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், சில இளைஞர்கள் போலீஸ் அதிகாரி ஒருவரின் ரோந்து வாகனம் மீது பெட்ரோல் ஊத்தி தீ வைத்ததில் அவர் தீவிர காயமடைந்து கோமாவிற்கு சென்றுவிட்டார்.

அப்போது போலீஸ் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

இதற்கு எதிர்வினையாற்றிய அப்போதைய உள்துறை அமைச்சர், பெர்னாட் கசெனோவ் போலீஸார் ஆயுதங்கள் பயன்படுத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், சட்டப் பிரிவு 435-1ல் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
நஹெலுக்கு என்ன ஆனது?

கடந்த செவ்வாயன்று, அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்ட நஹெல் என்னும் 17 வயது சிறுவன் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

நான்டேயரின் வழக்கறிஞர், இரண்டு போலீஸ் அதிகாரிகளின் ஆணையை மீறி நஹெல் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் நஹெல் ஓட்டி வந்த வாகனம் பல போக்குவரத்து விதி மீறலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆனால் வியாழனன்று, குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி தரப்பு வழக்கறிஞர் லாரென்ட் ஃபிராங், அந்த அதிகாரி சட்டத்திற்கு உட்பட்டே துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் அவர் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்த பிறகு இம்மாதிரியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக கடந்த வருடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 39 பேரில், 13 பேர் ஓட்டுநர்கள். இவர்கள் ஆணையை மதிக்காமல் சென்றதாக சொல்லப்பட்டது.

இதில் கொல்லப்பட்டவர்களில் ரயானா என்ற இளம் பெண்ணும் ஒருவர். அவர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதிரியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்குச் சட்டப் பிரிவு 435-1தான் காரணம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தில் ஓட்டுநர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாலே அது ஆபத்தா என்று அதிகாரிகளுக்கு தெளிவாக சொல்லப்படவில்லை என்கின்றனர் விமர்சகர்கள்.

ஃபிரஞ்சு மனித உரிமை லீக் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹென்ரி லெக்லெர்க், இந்தச் சட்டம், அதிகாரிகள் ஆயுதங்களை வைத்து கொண்டு தங்களின் இஷ்டம் போல செயல்பட அனுமதிக்கிறது. இந்த சட்டம் அவர்களுக்கு ஒரு சட்ட பாதுகாப்பைத் தருகிறது என்று விமர்சித்துள்ளார்.

சில அரசியல் தலைவர்களும் இந்த சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்

தீவிர இடது சாரி அரசியல்வாதியான ஷான் லக் மெலன்கான் இதை, ‘யாரை வேண்டுமென்றாலும் கொல்லலாம்’ என்ற சட்டம் என அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கும் இந்தச் சட்டம் தொடர்பான விமர்சனங்களை நிராகரித்துள்ள ஃபிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மன், 2017ஆம் ஆண்டிலிருந்து மிக குறைவான எண்ணிக்கையிலான மக்களே கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

ஆனால் புலனாய்வு பத்திரிகையான பாஸ்டா இந்த கூற்றை மறுத்துள்ளது. 2017ஆம் ஆண்டு 27 பேர் கொல்லப்பட்டனர் அதுவே 2020ஆம் ஆண்டு 40ஆக அதிகரித்தது. மேலும் 2021ஆம் ஆண்டு 52ஆக அதிகரித்தது என்று அந்த பத்திரிகை கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில் இந்த சட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய கசெனோவ், அனைத்து அதிகாரிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்ற அதிகாரத்தை இந்த சட்டம் வழங்கவில்லை. இம்மாதிரியான சம்பவங்களுக்கு காரணம் போலீஸ் அதிகாரிகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பதே என லே மாண்டே செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய, அன்சட் போலீஸ் வரத்தகச் சங்கத்தின் துணை பொதுச் செயலர் தியரி க்ளேர், ஆயுதங்கள் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படலாமா என்பதை விசாரணையின் மூலம் கண்டறியலாம் என்று தெரிவித்தார்.

“இதில் முக்கியமான விஷயம் அச்சுறுத்தலின் அளவுதான்” என்கிறார் அவர்.

“இதில் ஆணையை மதிக்காமல், பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தப்பிச் செல்லும் சம்பவங்களை குறிப்பிடலாம். சமீபமாக நடந்தது அதுமாதிரியான ஒரு சம்பவம்தான்.” என்கிறார் க்ளேர்.

2021ஆம் ஆண்டு காவல்துறையினரின் நடவடிக்கையால் ஃபிரான்ஸில் 37 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறையை கண்காணிக்கும் அமைப்பான ஐஜிபிஎன்னின் அறிக்கை தெரிவிக்கிறது.

இது பாஸ்டா புலனாய்வு ஊடகத்தில் சொல்லப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் குறைவானது.

இதன்படி பார்த்தால் 10 லட்சம் பேரில் 0.5 இறப்பு நடைபெறுகின்றது.

இந்த எண்ணிக்கையை வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மாதிரியாக வெளியிடுவதால் இதை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம்.

இருப்பினும் இது நிச்சயம் அமெரிக்காவைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கைதான். அங்கு 10 லட்சம் பேருக்கு 3.5 இறப்புகள் நிகழ்கின்றன. கனடாவில் இதுவே 1.5ஆக உள்ளது.

அதேசமயம் ஃபிரான்ஸின் எண்ணிக்கை இங்கிலாந்து மற்றும் வேல்ஸைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அங்கு 2021-22ஆம் ஆண்டுகளில் இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் போலீஸாரின் பிடியில் 11 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம் பத்து லட்சம் பேருக்கு 0.2 இறப்புகளாகவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.