பில் கட்டத் தவறிய எலான் மஸ்கின் டுவிட்டர்.. வழக்கு பதிவு செய்த ஆஸ்திரேலிய நிறுவனம்!!
ஆஸ்திரேலிய திட்ட மேலாண்மை நிறுவனமான ஃபெசிலிடேட் கார்ப் நிறுவனம், டுவிட்டருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வழக்கு மனுவில், டுவிட்டர் நிறுவனம் தங்களுக்கு செலுத்த வேண்டிய ரசீது தொகையை செலுத்த தவறியதால், ஒப்பந்தத்தை மீறியதாகவும், செலுத்த வேண்டிய சுமார் ரூ.5.5 கோடியை ($665,000) மொத்தமாக செலுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
உலகின் பிரபல கோடீஸ்வரர்களில் முதன்மையானவரான, எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக தளத்தை சுமார் ரூ. 3 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியதிலிருந்து, அதற்கு எதிராக “பில்கள் மற்றும் வாடகையை செலுத்தவில்லை” என்று தொடரப்படும் வழக்குகளில், இந்த ஆஸ்திரேலிய நிறுவனத்தின் வழக்கும் ஒன்றாகும். 2022 முதல் 2023 ஆண்டு முற்பகுதி வரை, லண்டன் மற்றும் டப்ளினில் உள்ள டுவிட்டரின் அலுவலகங்களில், சென்சார்களை நிறுவி, சிங்கப்பூரில் அலுவலகப் பணிகள் முடித்து, சிட்னியில் உள்ள அலுவலகம் பணிபுரிதலுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொடுத்ததாகவும் ஃபெசிலிடேட் தெரிவித்துள்ளது. இந்த 3 பணிகளுக்காக டுவிட்டர் நிறுவனம் முறையே, சுமார் ரூ.2 கோடியே 10 லட்சம் ($257,000), சுமார் ரூ. 3 கோடி 31 லட்சம் ($404,000) மற்றும் சுமார் ரூ. 33 லட்சம் ($40,700) தர வேண்டும் என்று ஃபெசிலிடேட் தெரிவித்துள்ளது. இதற்கான வழக்கு விசாரணையின் போது நிர்ணயிக்கப்படும் தொகை, வழக்கு செலவுகள், வட்டி ஆகியவற்றோடு இழப்பீட்டுத் தொகையை கோர இருப்பதாக ஃபெசிலிடேட் கூறியிருக்கிறது.
மே மாதம், ஒரு முன்னாள் மக்கள் தொடர்பு நிறுவனம், ட்விட்டர் தனது பில்களை செலுத்தவில்லை என்று நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான இன்னிஸ்ஃப்ரீ எம்&ஏ (Innisfree M&A) எனும் நிறுவனம் சுமார் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது. பிரிட்டன்ஸ் கிரவுன் எஸ்டேட் (Britain’s Crown Estate) எனும் நிறுவனம் வாடகை பாக்கி நிலுவைக்காக டுவிட்டரின் மீது ஜனவரியில் வழக்கு தொடர்ந்திருந்தது.