கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- மரம் விழுந்ததில் மாணவி சாவு!!
கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாட்களில் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன மழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மழை பெய்யும் என கருதப்படுவதால் அந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பருவமழை வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் பல்வேறு மாவட்டங்களிலும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர். கனமழை மற்றும் காற்றின் காரணமாக ஆலப்புழாவில் 36 வீடுகளும், பத்தனம் திட்டாவில் 3 வீடுகளும் இடிந்தன. அங்கு வசித்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை நீடித்து வருவதால், எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை பகுதிகளில் மக்கள் குளிக்கவோ அல்லது மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே காசர்கோடு அருகே மழைக்கு மரம் சாய்ந்ததில் மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். காசர்கோடு மாவட்டம் புத்திகே அருகே உள்ள அங்காடி மோகர் பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவரது மனைவி பாத்திமா சைனப். இவர்களுது மகள் ஆயிஷாத் மின்கா (வயது 11).
இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு நின்ற ஒரு மரம் காற்றில் முறிந்து விழுந்தது. அதன் கிளை ஆயிஷாத் மின்கா மீது விழுந்தது. இதனை கண்ட சக மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கு நின்றவர்கள் மரக்கிளைகளை அகற்றி ஆயிஷாத் மின்காவை மீட்டனர். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆயிஷாத் மின்கா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை குறித்து மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடுக்கி, பத்தனம் திட்டா, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.