விஜயவாடா-சென்னை புதிய வந்தே பாரத் ரெயில்: 7-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். 8-ந்தேதி முதல் பயணிகள் ரெயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம் வந்தே பாரத் ரெயில் விஜயவாடாவில் இருந்து கூடூர், ரேணிகுண்டா, வழியாக சென்னைக்கு வந்து அடைகிறது. இதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. விஜயவாடாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும். முக்கிய 2 நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்று உள்ளது.
வழியில் இந்த ரெயில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என விஜயவாடா கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெற்கு மத்திய ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆந்திராவில் ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திரா பாத்திற்கும், செகந்திரா பாத்தில் இருந்து திருப்பதிக்கு என 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.