மணிப்பூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை மறுதினம் பள்ளிகள் திறப்பு!!
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும். வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.