பொது சிவில் சட்டம்.. மத்திய அரசின் நோக்கம் என்ன? பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு!!
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த மாதம் 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக, சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, உள்பட நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கட்சிகளிடம் ஆலோசித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. பொது சிவில் சட்டம் தேவையில்லை என 21வது சட்ட கமிஷன் கூறிய நிலையில், மத்திய அரசு அதை கொண்டு வருவதற்கான நோக்கம் என்ன? என காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் கூறியிருக்கிறார்.