;
Athirady Tamil News

செயற்கை நுண்ணறிவின் சாதக, பாதகங்கள்: முதல் முறையாக விவாதிக்கிறது ஐ.நா.!!!

0

செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.

“விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்” என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார். செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார். “செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது” என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.

ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, “அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்” என ஆலோசனை வழங்கியுள்ளார். பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், “உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.