போலீசுக்கு பயந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழிவறையில் வீசிய பெண் ஊழியர் கைது!!
ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கு முடி அலங்காரம் செய்ய பெண் வந்தார். அவரிடம் அங்கிருந்து பெண் ஊழியர் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தை கழற்றுமாறு கூறினார். உடனே பெண் வாடிக்ககையாளர் ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான வைர மோதிரத்தை கழற்றி கொடுத்தார். அந்த மோதிரத்தை பெண் ஊழியர் வாங்கி ஒரு பெட்டியில் வைத்தார். முடி அலங்காரம் முடிந்த பிறகு அந்த பெண் வைர மோதிரத்தை மறந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இதை கவனித்த பெண் ஊழியர் அந்த வைர மோதிரத்தை நைசாக எடுத்து தனது மணிபர்சில் மறைத்து வைத்தார். சிறிது நேரம் கழித்து பெண் வாடிக்கையாளர் பதற்றத்துடன் அழகு நிலையத்துக்கு வந்தார். அவர் மோதிரம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டார், ஆனால் அது பற்றி தெரியாது என அவர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் மோதிரத்தை திருடிய பெண் ஊழியர் தான் எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என பயந்தார்.
உடனே அவர் அழகு நிலையத்தில் இருந்த கழிவறைக்கு சென்றார்.பின்னர் திருடிய மோதிரத்தை அவர் கழிறைக்குள் வீசி விட்டு அதில் தண்ணீரை ஊற்றினார். அந்த மோதிரம் குழாய் வழியாக சென்றுவிட்டது. இருந்த போதிலும் போலீசார் பெண் ஊழியரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை கக்கிவிட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் பிளம்பர் உதவியுடன் கழிவுநீர் செல்லும் குழாயில் சிக்கி இருந்த வைர மோதிரத்தை மீட்டனர்.