செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன- சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்!!
அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். கோர்ட்டு உத்தரவுபடி அவரது காவல் நீட்டிக்கப்பட்ட போதிலும் நெஞ்சு வலி இருப்பதாக அவர் கூறியதால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் வகையில் தங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை வக்கீல் கூறியதாவது:- செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது. அரசியலில் செல்வாக்கு மிக்க செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் முழுமையாக விசாரணை நடத்த இயலாது. விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் இந்த வழக்கு நீர்த்து போக வாய்ப்பு உள்ளது.
எனவே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் எங்களால் உரிய கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி வழக்கீல் சுப்ரீம் கோர்ட்டே முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு தொடர்பாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- 3-வது நீதிபதியை சென்னை ஐகோர்ட்டு ஒரு வாரத்துக்குள் நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும். வழக்கை விரைவாக விசாரிக்க பட்டியலிட வேண்டும். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்யலாம். நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில்தான் இருப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.