திருப்பதி பக்தர்களிடம் ரூ.1 லட்சம் மோசடி- போலி டிக்கெட் கொடுத்த ஊழியர்கள் கைது!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகாசன வாராந்திர மேல் வஸ்திர சேவை மற்றும் அபிஷேக சேவைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த சேவைகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்க்கை பாக்கியமாக கருதப்படுகிறது. அதனால் இந்த சேவையை பெறுவதற்கு பக்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் மேல் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். தனது நண்பர்களிடம் மேல் வசீக சேவையில் கலந்து கொள்ள டிக்கெட் கேட்டு வந்தனர்.
அப்போது திருப்பதியை சேர்ந்த லலித் குமார் என்பவர் விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டார். வாராந்திர சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை பெற்று தருவதாகவும் ஆன்லைன் மூலம் ரூ.1.04 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். லலித் குமார் அனுப்பிய வங்கி கணக்கிற்கு விஜயகுமார் பணத்தை அனுப்பி வைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதிக்கு வந்தனர். அப்போது தரிசன டிக்கெட் பெறுவதற்காக விஜயகுமார், லலித்குமாரின் செல்போனை தொடர்பு கொண்டார். லலித் குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட விஜயகுமார் இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் சோதனை செய்தனர்.
சோதனையின்போது 5 பக்தர்கள் ரூ.300 போலி தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேவஸ்தான அதிகாரிகள் போலி தரிசன டிக்கெட் கொண்டு வந்த பக்தர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் போலி தரிசன டிக்கெட் கொடுத்தது தெரிய வந்தது. போலீசார் ஒப்பந்த ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். திருப்பதியில் நேற்று 76,254 பேர் தரிசனம் செய்தனர். 28,091 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.