இதெல்லாம் நடந்தால்.. ஒரு லிட்டர் பெட்ரோல் 15 ரூபாய்க்கு தர முடியும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்!!
இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:- வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் 60 சதவீதம் எத்தனாலுக்கு மாறவேண்டும். 40 சதவீதம் மின் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் (மின்சார வாகனம்). சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும். இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலமாக வாகனங்கள் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது.
வாகன பயன்பாட்டிற்கு சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்துக் கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் மக்களும் பயனடைவார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மாசுபாடு குறைவதுடன், இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும். இவ்வாறு அவர் கூறினார். பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுகிறது. உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தால், நாம் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க தேவையில்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது. கரும்பு சக்கை, வைக்கோல், கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், அந்த பொருட்களை கொள்முதல் செய்வதன்மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும்.
நம் தேவை குறையும்போது கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு கேட்க முடியும். மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தின்படி, அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்திற்கு மாறும் நடைமுறைகள் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும். அனைத்து வாகனங்களும் மின்சாரம் மற்றும் எத்தனாலுக்கு மாறிவிட்டால், அதற்கு பிறகு ஒருசில பயன்பாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஒருசிலர் வைத்திருக்கும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படும்.
ஆனால் இது நடைமுறைக்கு வர 20-30 ஆண்டுகள் ஆகலாம். ஏனென்றால் இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனம் இனிமேல்தான் வர உள்ளது. முதல் வாகனத்தை ஆகஸ்ட் மாதம் நிதின் கட்காரி அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பிறகு எத்தனால் வாகனங்கள் அதிகரிக்க வேண்டும், மின்சார வாகனங்களும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான், பெட்ரோல்-டீசல் தேவை குறைந்து விலை குறையும். அப்படியே குறைந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தேவைப்படாது என்பதே நிதர்சனம்.