;
Athirady Tamil News

புதுவித இணையதள மோசடி: ஏமாறும் சிறுநீரக கொடையாளர்கள்!!

0

ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள். சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினால் பயன் கிடைப்பதால் சிறுநீரக தானம் அளிக்க முன்வருவோருக்கு அதிக தேவை உருவாகியிருக்கிறது. இதனால் தானம் அளிக்க முன்வருவோரையும், குடும்ப கஷ்டத்திற்காக சிறுநீரகத்தை விற்க விரும்புவோரையும் குறி வைத்து பல மோசடி வேலைகள் நடக்கின்றன. வறுமையில் வாடும் ஒரு பெண், தனது சிறுநீரகத்தை விற்க முன் வந்திருக்கிறார். அவரின் இணையவழி தேடலில் ஒரு முகநூல் பக்கம் அவருக்கு பதிலளித்து, ரூ.10 லட்சத்திற்கு அதனை வாங்க விரும்புவதாகவும், ஆனால் முன்பணமாக ரூ.8 ஆயிரம் அவர் செலுத்த வேண்டும் என பதிலளித்திருக்கிறது. ஒரு மருத்துவமனையின் பெயரையும் கொடுத்து, பணத்தை இணையவழியில் செலுத்தி விட சொல்லி அவசரப்படுத்தியிருக்கிறது. பணம் செலுத்தும் முன், கொடுக்கப்பட்ட எண்ணை அவர் தொடர்பு கொண்டார். மோகன் அறக்கட்டளை எனும் லாபநோக்கமற்ற அந்த அமைப்பின் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பணம் எதுவும் வழங்குவதில்லை என தெரிவித்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தப்பித்தார்.

ஆனால், அவரை போன்ற ஆயிரக்கணக்கானோர் இவற்றை நம்பி பணத்தை இழந்திருக்கின்றனர். இத்தகைய மோசடிகள் பரவி வருகிறது என மோகன் அறக்கட்டளை தெரிவிக்கிறது. பிரபலமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பெயர்களை போலி இடைத்தரகர்கள் பயன்படுத்தி பல அப்பாவிகளை தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். நலிவடைந்து வரும் பொருளாதார சூழ்நிலையில், மக்களில் பெரும்பானோர் தங்கள் வேலைகளை இழந்து, வருமானம் குறைந்ததால், பலர் தங்கள் உறுப்புகளை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரக பரிமாற்றம் உண்மையில் நடைபெறுகிறதா, இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்களின் இணையவழி மற்றும் முகநூல் தேடலின் தகவல் பரிமாற்றத்தில் முதலில் கட்ட வேண்டிய தொகை என கேட்பதை பலர் மிகவும் சிரமப்பட்டு கட்டி விடுகின்றனர். ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் உள்ள அவர்கள், பணத்தை இழந்து, மேலும் கடனில் விழுகின்றனர். இது குறித்து முகநூல் தளம் நடத்தும் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “உறுப்பு கடத்தல் மற்றும் மோசடிகள் உள்ளிட்ட மனித சுரண்டலுக்கு தாங்கள் எதிரானவர்கள்.

இதற்காக தெளிவான விதிகளை வகுத்திருக்கிறோம். மோசடி செய்பவர்கள் மிகவும் அதிநவீனமாக வளர்வதால், முதலீடுகளினாலோ, தொழில்நுட்பங்களினாலோ மட்டும் முகநூல் போன்ற பெரும் தளங்களில் நடைபெறும் மோசடியை 100% தடுக்க முடியாது,” என்று தெரிவித்திருக்கிறார். பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகாரளிக்க முன்வராததால் காவல்துறையால் இதில் எதுவும் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.