விளையாட்டு வினையானது.. அமெரிக்காவில் தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணன்!!
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், “இரண்டு சிறுவர்களும் காருக்குள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் தாய் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன், காருக்குள் துப்பாக்கி இருப்பதை கண்டிருக்கிறான். அதனை எடுத்து விளையாட்டாக அழுத்தும்போது, தற்செயலாக அவனது தம்பியை சுட்டு விட்டான். அந்த சத்தம் அந்த வழியாக சென்றவர்களுக்கு கேட்டதையடுத்து அவசர உதவி எண் 911ஐ அழைத்தனர்” என தெரிவித்தார்.
இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா நகர காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன்கள் என்றும் இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவருடையது என்றும் ஆனால் சம்பவம் நடந்த போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். உடலில் தோட்டா பாய்ந்த பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சுடப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவோடு இருந்திருக்கிறான். அவசரகால மருத்துவ பணியாளர்கள் அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவன் விரைவில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் விடுமுறை தின வியாபாரம் மும்முரமாக நடைபெற்றபோது, வால்மார்ட் ஊழியர் ஒருவர், துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.