;
Athirady Tamil News

கச்சா எண்ணெய் உற்பத்தியை சொல்லி வைத்து குறைக்கும் சௌதி அரேபியா, ரஷ்யா – இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

0

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் பிளசின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சௌதி அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி எஸ்பிஏ செய்தி வெளியிட்டுள்ளது.

சௌதி அரசின் இந்த முடிவை தொடர்ந்து, ரஷ்யாவும் ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் பேரல்கள் என்ற அளவுக்கு குறைக்க முடிவெடுத்துள்ளது.

ரஷ்யா மற்றும் சௌதி அரேபியாவின் இந்த முடிவால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரிக்க கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை குறைக்கும் சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் அதிரடி முடிவை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 1.6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 76.60 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.

சௌதி அரேபியாவுக்கு அடுத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், உலக அளவில் ரஷ்யா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்துள்ளன.

ஓராண்டுக்கும் மேலாக இந்த தடை நீடித்து வரும் நிலையிலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 9.5 மில்லியன் பேரல்களாக குறைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஜூன் 27 ஆம் தேதி, ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சௌதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. இவ்விரு தலைவர்களின் இந்தப் பேச்சுவார்த்தையின் எதிரொலியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என்ற முடிவை இருநாடுகளும் எடுத்துள்ளன.

ஓராண்டுக்கு முன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 113 டாலராக இருந்து வந்தது. அந்த நிலையில் சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார மந்தநிலை மற்றும் எண்ணெய் வள நாடுகள் போதுமான அளவு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்தது போன்ற காரணங்களால் இதன் விலை குறைய தொடங்கியது. இத்தகைய சூழலில் தான் எண்ணெய் விலையை ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபரிடம் சௌதி இளவரசர் கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால், “ஓபெக் பிளஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எண்ணெய் வள நாடுகள் கடந்த மாதம் தங்களின் உற்பத்தியில் 90 சதவீதம் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்துள்ளன. ஆனால் ரஷ்யா தனது உற்பத்தியில் 50 சதவீதம் எண்ணெய்யை மட்டுமே ஏற்றுமதி செய்தது” என்று அந்நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி நிறுவனமான நோஸ்நேபிட்டின் தலைவர் இகோர் சேஷின் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலைக்கு மேற்கத்திய நாடுகள் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய், சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 55.28 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 87.25 டாலர்களுக்கு விற்பனையானது என்று ரஷ்ய நிதி அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் சௌதியின் முடிவு செப்டம்பர் மாதமும் தொடரக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கச்சா எண்ணெயின் விலையை உயர்த்தும் நோக்கத்துடன் சௌதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும், இதற்கான அடிப்படை காரணங்கள் போதுமானதாக இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் முதலீட்டு வங்கிகள் கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளது என்றே மதிப்பிட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 93.50 டாலர்களாக இருக்கும் என்று ஹெச்.எஸ்.பி.சி வங்கி முன்பு கணித்திருந்தது. ஆனால், அதுவே தற்போது 80 டாலர்களாக இருக்கும் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது.

இருப்பினும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு என்ற சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் முடிவால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சர்வதேச எண்ணெய் சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து தொழில் துறையை சௌதி தன் கையில் வைத்திருந்தாலும், அதற்கான எரிபொருள் தேவையில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய அவசியம் அதற்கு உள்ளது. அத்துடன் பல்வேறு அரசுத் திட்டங்களுக்கு தேவையான நிதியை, கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் மூலம் பெற சௌதி அரேபிய அரசு விரும்புகிறது.

மறுபுறம், யுக்ரேன் மீதான போரின் விளைவாக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால், கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் ரஷ்யாவுக்கு கிடைத்து வந்த வருவாய், கடந்த மே மாதம் 1.4 பில்லியன் டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளது. எனவே, கச்சா எண்ணெய்யின் விலையேற்றத்தின் மூலம் இந்த வருவாயை அதிகரிக்க ரஷ்யாவும் விரும்புகிறது

கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடைக்கெல்லாம் அசராத ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது.

சௌதி அரேபியாவிடம் இருந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 86 டாலர்களுக்கு வாங்கி வரும் நிலையில், அதையே ரஷ்யாவிடம் இருந்து 68 டாலர்களுக்கு இந்தியா பெற்று வருகிறது. யுக்ரேன் போருக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துவரும் கச்சா எண்ணெய்யின் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இருப்பினும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான தொகையை ஆரம்பத்தில் ரஷ்ய நாட்டு கரன்சியில் இந்தியா கொடுத்தது. ஆனால் அதன் மூலம் பொருளாதார ரீதியாக தமக்கு எந்த பலனும் இல்லை என்று ரஷ்யா கருதியது.

அத்துடன் எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை இந்தியாவிடம் இருந்து டாலர்களில் பெறவும் ரஷ்யா விரும்பவில்லை. இதன் காரணமாக, கச்சா எண்ணெய்க்கான பணத்தை எந்த கரன்சி மதிப்பில் செலுத்துவது என்பதில் இரு நாடுகளும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை சீன நாட்டு கரன்சியான யுவானில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு வழங்கி வருவதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி, ராய்ட்டர்ஸ் நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கான தொகையை சீன கரன்சியின் மதிப்பில் செலுத்தும் இந்தியாவின் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐஓசி உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நயரா எனர்ஜி, ஹெச்.பி.சி.எல் -மிட்டல் எனர்ஜி லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை ரஷ்யாவுக்கு யுவானில் செலுத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுதொடர்பாக கருத்து கேட்க ஐஓசி, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டபோது, அந்த நிறுவனங்களின் நிர்வாக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்தியாவும் டாலர் மதிப்பில் பணத்தை செலுத்தி தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால், டாலர் மற்றும் யூரோ கரன்சிகளில் வர்த்தகம் மேற்கொள்ள ரஷ்யாவுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் நிதி அமைப்பில் சீனாவின் கரன்சியான யுவான் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதன் அளவு கடந்த மாதம் (ஜூன்) உச்சத்தை தொட்டது. ஆனால் இதுவே இந்த மாதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் இந்தியாவில் எரிபொருட்களின் தேவை கணிசமாக குறைவது வழக்கம். இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் சில அலகுகளை (யூனிட்) பராமரிப்பு பணிகளுக்காக மூடுவதும் வழக்கம். இதன் விளைவாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மட்டுமின்றி, அதை சுத்திகரிக்கவும் இந்தியா, ரஷ்யாவை சார்ந்திருக்க வேண்டிய சூழல் வரும் என்கிறார் கச்சா எண்ணெய் வர்த்தக நிபுணரான விக்டர் கட்டோனா.

அதாவது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைக்கும் ரஷ்யாவின் முடிவால், அந்த நாட்டிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன், பருவமழை காலத்தில் அதன் சுத்திகரிப்பு ஆலைகளையும் நாட வேண்டிய நிலை உள்ளதால், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு கூடுதல் பாதிப்பு என்கிறார் அவர்.

கடந்த ஜூன் மாதம் மட்டும் ஒரு நாளைக்கு 40.78 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில் ரஷ்யாவிடம் இருந்து மட்டும் 20.17 லட்சம் பேரல்கள் எண்ணெய் ஒரு நாளைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 45 சதவீதம். இது மே மாத கச்சா எண்ணெய் வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது அதிகம்.

கடந்த 2021 -22 ஆம் நிதியாண்டில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அந்த வர்த்தகத்தின் அளவு 20 சதவீதத்தை தாண்டும் அளவுக்கு, தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது இந்தியா பாரம்பரியமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த செளதி அரேபியா, இராக் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளும் விதத்தில் ரஷ்யா -இந்தியா இடையேயான எண்ணெய் வர்த்தகம் குறுகிய காலத்தில் அதிரடியாக அதிகரித்துள்ளது.

இந்தியா -ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் 44 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ள போதிலும், இதில் எண்ணெய் வர்த்தகம் தான் பெரும்பங்கு வகிக்கிறது.

அதேநேரம் ரஷ்யாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான காலகட்டத்தில், ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 34.79 பில்லியன் டாலர்களாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.