;
Athirady Tamil News

ஜப்பான் மக்கள்தொகை பிரச்சினை | குழந்தைகள் உள்ள குடும்பங்கள் 1 கோடிக்கும் கீழாக சரிவு!!

0

ஜப்பானில் 1986-க்குப் பின்னர் முதன்முறையாக குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழே சரிந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பான் அரசு தங்கள் நாட்டில் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் குறித்த புள்ளிவிவரங்களைப் பராமரித்து வருகிறது. அதன் அடிப்படையில் 2022-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தை ஜப்பான் சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ஜப்பானில் குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது தெரியவந்துள்ளது. அதன்படி முதன்முறையாக இந்த எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது, 18 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை 9.9 மில்லியன் (90 லட்சத்து 99 ஆயிரம்) ஆக உள்ளது. 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.4 சதவீதம் குறைவாகும்.

மேலும், ஜப்பானில் 49.2 சதவீத வீடுகளில் ஒரே ஒரு குழந்தையும், 38 சதவீத வீடுகளில் 2 குழந்தைகளும், 12.7 சதவீத வீடுகளில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளும் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று ஜப்பானில் 2022-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 1899-க்குப் பின்னர் முதன்முறையாக 8 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது என்ற புள்ளிவிவரம் வெளியானது.

இதனையடுத்து, பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான அரசு நாட்டில் குழந்தை வளர்ப்பு விகிதத்தை சரிவில் இருந்து மீட்டெடுக்க கடந்த ஜூன் மாதம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.

அப்போது, பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அதிகாரிகளில் ஒருவரான மசாகோ மோரி கூறுகையில், “நாட்டில் பிறப்பு விகிதம் இதேபோல் குறைந்துகொண்டே இருந்தால் இன்னும் சில காலத்தில் ஜப்பான் என்ற நாடு ஆசிய கண்டத்தில் இல்லாமலேயே போய்விடும். அதனைத் தடுக்க மக்கள் மட்டுமே உதவ முடியும். இந்தப் பேரழிவை ஏற்படுத்தும் போக்கை அவர்கள் மட்டுமே மாற்ற இயலும். ஏனெனில், நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது படிப்படியாகக் குறையவில்லை. தலைகீழாக சரிந்து கொண்டிருக்கிறது. இது சமூகத்தை சுருக்கி செயல்பட இயலாமல் ஸ்தம்பிக்க வைத்துவிடும்” என்று எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.