“ரஷ்யாவின் பொருளாதாரம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது” – புதின்!!
ரஷ்யாவின் பொருளாதாரம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமான ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவின் பொருளாதாரம் சரியும் என்று நிபுணர்கள் கணித்தனர். இந்த நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பணவீக்கம் வியக்கத்தக்க வகையில் சாதகமாக இருப்பதாக அதிபர் புதினிடம் பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் தெரிவித்தார்
இதுகுறித்து மைக்கேல் மிஷுஸ்டின் பேசும்போது, “நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி இந்த ஆண்டு 2%-ஐ விட அதிகமாக இருக்கலாம். சர்வதேச நாணய நிதியத்தின்படி, இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 0.7% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய ரஷ்ய புதின் “நாங்கள் எதிர்பார்த்ததைவிட பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஜூன் மாத இறுதியில் ரஷ்யாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.2% ஆகவும், பணவீக்கம் 2023-இல் 5.7% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றன.
உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்களை ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அதிபர் புதின் அறிவித்தார். புதினின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆயுதப் படை அமைப்புகளில் ஒன்றான வாக்னர் அமைப்பு புதினுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது. பின்னர் இரு தரப்புக்கு இடையே உடன்படிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவில் ஏற்பட இருந்த பிளவு தவிர்க்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உக்ரைன் படைகள் அனைத்து பகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருவதாக உக்ரைன் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.