தேர்தலை நடத்தாமல் மன்றங்களை மீளழைப்பது முரண்!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான ஜயந்த கெடகொட மாநகர சபைகள் சட்டத்தை திருத்துவதற்காக தனிநபர் பிரேரணை ஒன்றை, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) கொண்டு வந்தார்.
ஆனால் மாநகர சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்காக ஜயந்த கெடகொட எம்.பி. முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போதே கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளை மீளழைப்பது ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது. எனவே”காகத்தின்” நிழலின் செயற்பாட்டை நீதிமன்றத்தில் நிச்சயம் சவாலுக்குட்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷ டி சில்வா, “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைப்பது அரசியலமைப்புக்கு முரணானது. இதற்கு பாராளுமன்றம் எவ்வாறு அனுமதி வழங்கும்” என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், “தனிநபர் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஆகவே நீதிமன்றத்தை நாடி உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.