;
Athirady Tamil News

83 வயதான உங்களுக்கு ஓய்வுபெற விருப்பம் இல்லையா?: சரத்பவாருக்கு, அஜித்பவார் கேள்வி!!

0

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி அஜித்பவார் மகாராஷ்டிரா பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் இரு அணியினரும் நேற்று தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி கூட்டம் நடத்தினர். மும்பை பாந்திராவில் அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் அதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளித்தனர்.

இந்தநிலையில் கூட்டத்தில் சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அஜித்பவார் பேசியதாவது:- ஒவ்வொருவருக்கும் அவரவர் இன்னிங்ஸ் இருக்கிறது. அதிக உழைக்கும் திறன் கொண்ட வயது 25 முதல் 75 வரை ஆகும். 2004-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பை இழந்ததற்கு சரத்பவார் தான் காரணம். அந்த ஆண்டு காங்கிரசை விட தேசியவாத காங்கிரசிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் சரத்பவார் காங்கிரஸ் கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். எங்களை பொறுத்தவரை சரத்பவார் கடவுளை போன்றவர். அவர் மீது எங்களுக்கு ஆழமான மரியாதை உள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

அரசியலில் கூட பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை இதற்கு உதாரணமாக பார்க்கலாம். உங்களுக்கு (சரத்பவார்) தற்போது வயது 83, நீங்கள் நிறுத்தப் போவதில்லையா? எங்களுக்கு உங்களின் ஆசியை வழங்குங்கள், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அஜித்பவார் கூறினார். அஜித்பவாருக்கு 63 வயது ஆகிறது. இவர் சரத்பவாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.