தொழிலாளர்களுக்கு ரூ.12 இலட்சம் கோடி நட்டம் !!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் நஷ்டம் 12 இலட்சம் கோடி ரூபாய் என்று வெரிடஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) விசேட கூற்றை முன்வைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “வெரிடேஸ் ஆய்வு நிறுவனம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் நஷ்டம் 12 இலட்சம் கோடி ரூபாய் (12 ரில்லியன் ரூபாய்) எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பும்போது, தொழிலாளர்களின் எந்தளவு தொகை குறைக்கப்படுகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் மூலம் வேலை செய்யும் மக்களின் பணம் எந்தளவு குறைவடையும் என்பது தொடர்பாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய அதிகாரிகள் எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் எமது நாட்டின் தனியார் ஆய்வு நிறுவனமான வெரிடஸ் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 12 இலட்சம் கோடி ரூபாய் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்றவகையில், பாராளுமன்ற செயற்குழுவுக்கு சென்று அது தொடர்பாக னேள்வி எழுப்புவதற்கு என்க்கு உரிமை இல்லையா?” எனக்கேள்வி எழுப்பினார்.
இதற்கு சபாநாயகர், “நீங்கள் தெரிவிக்கும் அதிகாரிகள் அனைவரையும் உங்கள் காரியாலயத்துக்கு அழைத்து கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதனால் பாராளுமன்ற செயற்குழுவுக்கு செல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அவர்களை அழைத்து கேள்வி எழுப்பலாம்” என்றார்.
சபாநாயகரின் பதில் தொடர்பில் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், “நீங்கள் உத்தரவிட்டதன் பிரகாரம் நான் செய்கிறேன். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதியின் ஆலோசனை கிடைத்து, அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. அத்துடன் நான் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் வரவில்லை என்றால், அது எனது சிறப்புரிமை மீறும் நடவடிக்கை. அந்த பொறுப்பை சபாநாயகரான நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.