யாழ். பல்கலைக்கு தெரிவாகும் துணைவேந்தர் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும் – அங்கஜன் கோரிக்கை!!
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார்.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியை தானமாக வழங்கி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்கள்.
ஒரு கல்விக் கூடத்திற்காக ஒரு கல்விக் கூடத்தை தானம் கொடுத்து உருவாக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர்களாக இருந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியானந்தன் மற்றும் பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள் எமது சமூகத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக தேர்வு செய்யப்படுபவர் எமது வரலாறுகளை தாங்கிக் செல்பவர்களாக இருக்க வேண்டும்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரிவுக்காக நால்வர் போட்டியிடுகின்ற நிலையில் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படும் மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.
ஜனாதிபதி தான் விரும்புகின்ற ஒருவரை துணைவேந்தராக தெரிவு செய்யும் பொறுப்பு உள்ள நிலையில் தெரிவு அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான தெரிவாக அமையக் கூடாது.
ஆகவே நான் இந்தக்கருத்தை அரசியல்வாதி என்ற நிலையில் பதிவு செய்யாமல் நானும் ஒரு குடிமகன் என்ற நீதியில் எமது மரபுகள் சம்பிரதாயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நீதியில் பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.