அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் இரட்டிப்பு : வெரிட்டே ரிசேர்ச்சின் ஆய்வில் தகவல்!!
வெரிட்டே ரிசேர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2023 பெப்ரவரி மற்றும் 2022 ஆக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களினதும் 10% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின் மதிப்பீடு, 2023 ஜூன் இல் 21% ஆக இரட்டிப்பாகியுள்ளது.
கணக்கெடுப்பின்படி, நாட்டின் நிலை குறித்த திருப்தி உயர்ந்துள்ளது, ஜூன் மாதத்தில் அது 12% ஐ எட்டியுள்ளது.பெப்ரவரி மற்றும் ஆக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் (-) 78 ஆக மற்றும் முந்தைய அளவீடுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரம் மீதான நம்பிக்கை மேம்பட்டிருந்தாலும், அது இன்னும் எதிர்மறை (-) 44 இல் தான் இருக்கின்றது.
வெரிடே ரிசர்ச் அவ்வப்போது ‘தேசத்தின் மனநிலை’ என்ற பொதுக் கருத்துக் கணிப்பை நடத்துகிறது, இது நாடு முழுவதும் தேசியளவிலான பிரதிநிதித்துவத்தை கொண்ட பதில்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
இக் கணக்கெடுப்புக்கான மாதிரி மற்றும் முறையானது, 95% நம்பிக்கை இடைவெளியில் 3% க்கும் குறைவான அதிகபட்ச பிழை வரம்பை கட்டுப்படுத்தும் வகையில் ஆய்வுகளின் தங்க நியம விதிகளை சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரத்தை மதிப்பிடுதல் | 21% | “தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?” என்ற கேள்விக்கு, பதிலளித்தவர்களில் 21% பேர் அதை ஆமோதிப்பதாகக் கூறினர். (± 2.68% பிழை வரம்புடன்). மேலும், பதிலளித்தவர்களில் 18% பேர் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தெளிவான கருத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
2. இலங்கை மீதான திருப்தி |12% |”பொதுவாக, தற்போது இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருப்பவைகள் குறித்து நீங்கள் திருப்தியடைகிறீர்களா இல்லையா?” என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில் 12% பேர் மட்டுமே இலங்கையின் நிலைமையில் திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளனர். (± 2.21% பிழை வரம்புடன்) இம் மதிப்பீடு 2023 பெப்ரவரியில் 4% ஆகவும், 2022 ஆக்டோபரில் 7% ஆகவும் இருந்தது.
3. பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை | எதிர்மறை (-) 43.8.| பொருளாதார நம்பகத்தன்மையை கணக்கிடுவதற்கு தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அதன் வழிமுறைகளை மதிப்பிடும் பல தேர்வு வினாக்கள் பயன்படுத்தப்பட்டன. மதிப்பெண் எதிர்மறை (-) 100 முதல் நேர்மறை (+) 100 வரை இருக்கலாம். பூஜ்ஜியத்திற்கு மேல் உள்ள மதிப்பு, பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தை எதிர்மறையாகப் பார்க்காமல் நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அனைவரும் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகவும் (நல்ல அல்லது சிறந்த நிலைக்குப் பதிலாக) அது மோசமாகி வருவதாகவும் (சிறந்த நிலைக்குப் பதிலாக) கருதினால், அதற்குரிய மதிப்பெண் (-) 100 ஆக இருக்கும்.
ஜூன் 2023 இல், பதிலளித்தவர்களில் 0.8% பேர் பொருளாதார நிலைமையை சிறப்பானதாகவும், 26.6% பேர் சிறந்த பொருளாதாரம் என்றும், 28.8% பேர் மேம்பட்டு வருகின்ற பொருளாதாரம் என்றும் மதிப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக பெறப்பட்ட மதிப்பெண் எதிர்மறை (-) 43.8 (எதிர்மறை 44 என வட்டமிடப்பட்டது). 2023 பெப்ரவரி மற்றும் 2022 ஆக்டோபர் ஆகிய இரண்டிலும் இம் மதிப்பீடு (-) 78 ஆக இருந்தது.
“தேசத்தின் மனநிலை” கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்
“தேசத்தின் மனநிலை” அரசாங்கம், நாடு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக மக்களின் அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கையை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெரிடே ரிசர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு கருவியின் ஒரு பகுதியாக இக் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இதன்மூலம் இலங்கையர்களின் கருத்துகளை ஆய்வு செய்ய மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.