இதுவரை 11 வெளிநாட்டவர்கள் கஞ்சா வளர்ப்புக்கு முதலீடு செய்ய விருப்பம்!!
கட்டுநாயக்க வர்த்தக மற்றும் முதலீட்டு வலயத்தில் (BOI) கஞ்சா வளர்ப்பு முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதுவரை 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் 5 பில்லியன் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் எனவும் முழு திட்டத்திற்கும் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கஞ்சா சாகுபடி முன்னோடித் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கைக்கு நல்ல பதிலை அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகத்தில் நேற்றுமுன்தினம் (ஜூலை 4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அதிகாரிகளுக்கிடையேயான மோதல்களால் இந்த திட்டம் அழிக்கப்பட்டது, ஆனால் இந்த முறை எந்த சூழ்நிலையிலும் தோல்வியடைய அனுமதிக்கப்படாது என்று அவர் வலியுறுத்தினார்.
புதிய முதலீட்டுத் திட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.