;
Athirady Tamil News

மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம் !!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின்கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்களைக் கொண்ட உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . இது தொடர்பாக 30.06.2023 நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் இன்றைய தினம் அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.