தொடரும் ரஷிய- உக்ரைன் போர் மரணங்கள்: ரஷிய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி!!
நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போரினால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ப்பலிகளும், கட்டிட சேதங்களும் ஏற்படுகின்றன. உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் (Lviv) நகரின் மீது நேற்றிரவு நடைபெற்ற ஒரு ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நகர மேயர் ஆண்ட்ரி சடோவ்யி தெரிவித்துள்ளார். நகரின் பொதுமக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளின் மீதான மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று என இதனை குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதல் நடந்த பகுதியில் சுமார் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 கார்கள் சேதமடைந்துள்ளதாக கூறினார்.
உக்ரைனின் உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். டெலிகிராம் சமூக வலைதளத்தில் கிளைமென்கோ, “அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குறைந்தது 7 பேராவது மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளதால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக” பதிவு செய்திருக்கிறார்.
மேயர் சடோவ்யி, தாக்கப்பட்ட இடத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கட்டிடத்தில் உடைந்த ஜன்னல்களை காண முடிகிறது. அக்கட்டிடத்தில் 4 தளங்கள் இருப்பதாக தெரிகிறது. சேதமடைந்த கார்கள் மற்றும் குப்பைகளும் காட்சிகளில் காணப்பட்டன. பின்னர் பேரழிவின் அளவு தெளிவாக தெரிந்த பிறகு மேயர் மீண்டும் ஒரு புதிய வீடியோ முகவரியை பதிவு செய்தார். அதன்படி பல கட்டிடங்களின் கூரைகள் பறந்து சென்றிருப்பதும், ஒரு பள்ளியுடன் பாலிடெக்னிக் விடுதிகளும் சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. லிவிவ் பிராந்திய தலைவர் மாக்ஸிம் கோஸிட்ஸ்க்யி “உக்ரைன் மக்களை அழிப்பதே ரஷியாவின் முக்கிய இலக்கு.
ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம்”, என்று கூறியிருக்கிறார். உக்ரைனின் நகரங்கள் மீது பல மாதங்களாக, ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, “ரஷிய பயங்கரவாதிகளின் இரவு தாக்குதலுக்கு உறுதியான பதில் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். ரஷிய ராணுவம் இத்தாக்குதல் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரஷிய தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.