4 மாநிலங்களில் பிரதமர் மோடி நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம்!!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அங்கு நடைபெறும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளையும் நாளை மறுநாளும் பிரதமர் நரேந்திர மோடி இந்த 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 7-ந்தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்லும் பிரதமர் மோடி, ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (6 வழி) உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, கீதா பதிப்பகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து, 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
கோரக்பூர் ரெயில் நிலையத்தின் மறுமேம்பாட்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் வாரணாசியில் தேசிய நெடுஞ்சாலை 56-ன் ஒரு பிரிவாக வாரணாசி-ஜவுன்பூர் (4 வழி) சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வரும் 8-ம் தேதி தெலுங்கானா மாநிலம் வாரங்கல் செல்லும் பிரதமர் மோடி, நாக்பூர்-விஜயவாடா நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் சென்று அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.