பூட்டிய வீடுகளில் நகைகள் திருட்டு- விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடித்த ஆந்திர வாலிபர்!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போர்ட் மற்றும் பேட்டை போலீஸ் நிலையங்களின் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த வீடுகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்து போர்ட் மற்றும் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பதை கண்டறிய முடியவில்லை. ஆகவே கொள்ளை சம்பவம் நடந்த வீடுகள் இருந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் ஆட்டோவில் சந்தேகப்படும் வகையில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த ஆட்டோவின் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஓட்டலில் இருந்து வாலிபர் ஒருவரை அழைத்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த ஓட்டலுக்கு சென்ற போலீசார், அந்த வாலிபரை பற்றி விசாரித்தனர். அதில் அவர், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா பிரசாத் (வயது 32) என்பதும், ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரிய வந்தது. ஆகவே திருவனந்தபுரத்தில் நடந்த திருட்டு சம்பவங்களில் அந்த வாலிபருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
அவர் எப்படியும் திருவனந்தபுரத்திற்கு மீண்டும் வரலாம் என்று கணித்த போலீசார், அவரது வருகையை கண்காணித்தனர். இந்நிலையில் வாலிபர் உமா பிரசாத் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த உமா பிரசாத்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திருவனந்தபுரத்தில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆந்திர மாநிலத்தில் சிறு சிறு திருட்டுகளில் உமா பிரசாத் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் மீது பல திருட்டு வழக்குகள் ஆந்திராவில் உள்ளன. இந் நிலையில் கேரள மாநிலத்தில் திருட்டில் ஈடுபட அவர் திட்டமிட்டார். அதன்படி அவர், ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். முதலில் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஆட்டோவில் சென்று அந்த பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார்.
அவ்வாறு நோட்டமிடும் போது, பூட்டியுள்ள வீடுகளின் முகவரியை குறித்து கொள்வார். பின்பு இரவு நேரத்தில் அந்த வீடுகளுக்கு கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்து, கதவை உடைத்தோ அல்லது ஜன்னல் கம்பிகளை வளைத்தோ வீடுகளுக்கு புகுந்து நகைகளை கொள்ளையடித்திருக்கிறார். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும், கொள்ளையடித்த நகைகளுடன் மீண்டும் ஆந்திராவிற்கு விமானத்தில் சென்று விடுவார். கடந்த மே மாதம் முதல் அவர், திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து இதேபோல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபடி இருந்துள்ளார். கொள்ளையடிக்கும் நகைகளை ஆந்திராவிலேயே விற்று, அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா பயணியை போன்று விமானத்தில் வந்து சென்றபடி இருந்துள்ளார். அதற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு முறையும் திருவனந்தபுரம் வரும்போது, முதலில் சுற்றுலா தலங்களுக்கு செல்வார். அதன் பிறகே ஏதாவது பகுதிக்கு சென்று பூட்டி இருக்கும் வீடுகளை கண்டறிந்து கைவரிசை காட்டி இருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர், திருவனந்தபுரத்தில் எத்தனை வீடுகளில் திருட்டில் ஈடுபட்டார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் ஆந்திராவில் அடகு கடைகளில் விற்ற நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.