கவர்னர் பற்றி அண்ணாமலை கருத்து: காங்கிரஸ் அன்றே சொன்னதை பா.ஜனதா இன்று புரிந்துள்ளது- கே.எஸ்.அழகிரி!!
கவர்னர் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து அரசியல் தளத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:- தமிழகம் போன்ற சிறந்த மாநிலங்களுக்கு உளவுத் துறை பின்புலம் கொண்ட அதிகாரியை கவர்னராக நியமிப்பது சரியாக இருக்காது என்று ஆர்.என்.ரவியை கவர்னராக அறிவித்த அன்றே நான் கருத்து தெரிவித்து இருந்தேன். காங்கிரசின் கருத்து சரி தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தான் தினம் தினம் கவர்னரின் செயல்பாடு அமைந்தது. எதிர்க் கட்சியை விட மோசமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டளுங்கட்சியை விமர்சிக்கத் தொடங்கினார். இது அரசியல் சாசனத்துக்கும், மரபுகளுக்கும் விரோதமானது. பா.ஜனதா தலைவர் அண்ணாமலையே கவர்னர் அரசியல் பேசக்கூடாது என்று சொல்லும் நிலை வந்துள்ளது.
காங்கிரஸ் அன்றே சொன்னதை பா.ஜனதா இன்றுதான் உணர்ந்ததோ என்று நினைக்க தோன்றுகிறது. அண்ணாமலை பேசியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று ஆளும் கட்சிக்கு எதிராக கவர்னர் பேசும்போது அண்ணாமலையின் பேச்சு பரபரப்பு ஆகாது. கவர்னரின் பேச்சு தான் எல்லோராலும் பேசப்படும். கவனிக்கப்படும். இரண்டாவதாக கவர்னர் இப்படி தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான மன நிலையோடு பேசுவது மக்களிடையே அரு வெறுப்பை தான் ஏற்படுத்தும். இதனால் தி.மு.க. அணிதான் பலன் அடையும். இந்த இரண்டு காரணங்களால் அண்ணாமலை புதிய வேதத்தை ஓதி இருக்கிறார். இவர்கள் என்ன பேசினாலும் சரி சிறப்பாக செயல்படும் அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் கவர்னரின் பேச்சும் அண்ணாமலையின் பேச்சும் மக்களால் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.