ஆடி அமாவாசை சிறப்பு சுற்றுலா ரெயில்- நெல்லையில் இருந்து இயக்க ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு!!
இந்தியாவின் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவன சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் உள்ளன. இந்த சுற்றுலா ரெயில் தென் மண்டலம் சார்பில் ‘ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை’ என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. ஆடி அமாவாசை அன்றும் கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், (அலகாபாத்), உஜ்ஜைனில் உள்ள ஓம்காரேஷ்வரர், மகா காலேஷ்வர் ஜோதிர் லிங்கங்கள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 7-ந்தேதி இந்த சுற்றுலா ரெயில் புறப்படுகிறது. 11 இரவுகள் 12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவிற்கு ஒருவருக்கு 2-ம் வகுப்பு படுக்கை கட்டணம் ரூ.21,800, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை கட்ட்டணம் ரூ.39,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலர் வசதி, பயண காப்புறுதி, தங்குமிடம் போன்றவை அடங்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. பொது மேலாளர் கே.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.