விரைவில் வருகிறது டிரைவர் இல்லாத தானியங்கி கார்.. மஸ்க் தகவல்!!
டெஸ்லா நிறுவனம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் டிரைவர் இல்லாத தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வாகனம், டெஸ்லா நீண்ட காலமாக அடைய துடிக்கும் ஒரு சாதனை முயற்சி ஆகும்.
“டெஸ்லாவின் தற்போதைய நிலையில், மனித மேற்பார்வையின்றி முழு தானியங்கி வாகனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு மிக நெருக்கமாக நாங்கள் இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தின் மேம்பட்ட இரண்டு நிலைகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாங்கள் முழுமையாக அடைந்து விடுவோம். ஒருவேளை நீங்கள் நான்கு அல்லது ஐந்து என்று அதனை அழைக்கலாம்” என ஷாங்காயில் நடைபெற்ற ஒரு செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மஸ்க் பேசினார்.
இந்த தொழில்நுட்பத்தை அடைந்து விட முடியும் என இதற்குமுன்னர் பல தேதிகளை எலான் மஸ்க் அறிவித்திருந்தார்; ஆனால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. அந்த கணிப்புகளில் தவறு நடந்ததை தற்போது ஒப்புக்கொண்டார். டெஸ்லாவின் “ஓட்டுநர்-உதவி தொழில்நுட்பம்” அமெரிக்காவில் ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா உலகின் மிகப்பெரிய மின்சார வாகன சந்தையாகும். டெஸ்லா நிறுவனம் ஷாங்காயில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையை கட்டுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.
மே மாதம் சீனாவிற்கு சென்றதைத் தொடர்ந்து, தற்பொது ஷாங்காயில் நடந்த உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மஸ்க் பங்கேற்றிருப்பது, சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கான முயற்சியைக் காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனாவில், கார் விற்பனையில் நான்கில் ஒரு பங்கு மின்சார வாகனங்கள் ஆகும். இந்த ஆண்டு, டெஸ்லா தனது முதல் காலாண்டிற்கான வருவாயில் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் மற்ற வாகன உற்பத்தியாளர்களின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் விலைக்குறைப்புகளை மேற்கொள்கிறது.