;
Athirady Tamil News

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இந்திய நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்த முன்னாள் காதலன்!!

0

ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் அனைவரையும், குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த 21-வயது நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், அவரது முன்னாள் காதலனால் கடத்தப்பட்டு, கிட்டத்தட்ட 650 கி.மீ. காரில் கொண்டு செல்லப்பட்டு, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் பகுதியில், உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன. அடிலெய்டு நகரில் வசித்து வந்த ஜாஸ்மீன் கவுர், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங் என்பவரால் கொல்லப்பட்டிருக்கிறார். கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே தாரிக்ஜோத் சிங் தன்னை பின் தொடர்வதாக ஜாஸ்மீன், போலீசில் புகாரளித்திருக்கிறார்.

தாரிக்ஜோத் சிங் தன்னுடன் வசிப்பவரின் காரில், ஜாஸ்மீன் கவுரை அவரது பணியிடத்திலிருந்து மார்ச் 5, 2021 அன்று கடத்திச் சென்றுள்ளான். அவரை கேபிளால் பிணைத்து காரை கிட்டத்தட்ட 644 கி.மீ. தூரத்திற்கு ஓட்டிச் சென்று, மறுநாள் (மார்ச் 6) அவரது கழுத்தை லேசாக அறுத்ததுடன், ஒரு ஆழமற்ற கல்லறையில் உயிருடன் புதைத்திருக்கிறார். விசாரணையின்போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதுதான் வெளிச்சத்திற்கு வந்தது. நீதிமன்ற விசாரணையின்போது ஜாஸ்மீனின் தாயார் மற்றும் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். விசாரணையின் ஆரம்பத்தில் தாரிக்ஜோத் சிங் கொலை செய்ததை மறுத்து வந்திருக்கிறார்.

கவுர் தற்கொலை செய்து கொண்டதாகவும், தாம் உடலை மட்டுமே புதைத்ததாகவும் கூறி வந்தார். ஆனால், 2023 தொடக்கத்தில் விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங், கவுரை புதைத்த இடத்திற்கு அதிகாரிகளை அழைத்துச் சென்றார். அங்கு அதிகாரிகள் கவுரின் காலணிகள், கண்ணாடிகள் மற்றும் பேட்ஜ் ஆகியவற்றை ஒரு தொட்டியில் கண்டெடுத்தனர். ஜாஸ்மீன் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மைல் எண்ட் பகுதியில் உள்ள கடையில், கையுறைகள், கேபிள் டை மற்றும் ஒரு மண்வெட்டியை சிங் வாங்குவது கண்காணிப்பு கேமிராவில் தெரிய வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், தாரிக்ஜோத் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த கொலை சம்பவம் ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.