சௌதி அரேபியா, ரஷ்யா கச்சா எண்ணெய் விலையை உயர்த்த விரும்புவது ஏன்? இந்தியாவை எப்படி பாதிக்கும்?
கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் பிளசின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சௌதி அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி எஸ்பிஏ செய்தி வெளியிட்டுள்ளது.
சௌதி அரசின் இந்த முடிவை தொடர்ந்து, ரஷ்யாவும் ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் பேரல்கள் என்ற அளவுக்கு குறைக்க முடிவெடுத்துள்ளது.