சீனாவின் வடக்குப் பகுதியை வதைக்கும் வெப்பம்: வீட்டில் இருந்து பணிபுரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!!
சீனாவின் வடக்குப் பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவின் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடுகிறது. இதனால் வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அதிதீவிர வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களாக பீஜிங்கில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக பதிவாகி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர வெப்பத்தை சீனா எதிர்கொண்டுள்ளது. அதிக வெப்ப நிலை காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு ஜெய்ஜிங் நகர நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வடக்கு பகுதி தீவிர வெப்பத்துக்கு உள்ளான நிலையில், தென் மாகாணங்களில் தீவிர மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சீனா 14 நாட்கள் தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது. இனி வரும் ஒவ்வொரு மாதமும் 4 நாட்கள் வெப்பம் தீவிரமாக இருக்கும் என்று சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் உலகின் பல நாடுகளில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக, ஜூலை 3, 2023 தான் உலகின் அதிக வெப்பமான நாள் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக சூழலியல் ஆய்வுக்கான அமெரிக்க மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.