பிரேசில் மகளிர் கால்பந்து அணி வந்த விமானத்தில் மாஷா அமினி புகைப்படம்: கவனம் ஈர்த்த வாசகம்!!
உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேசில் மகளிர் கால்பந்து அணியினர் ப்ரிஸ்பேன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்திறங்கிய விமானம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
காரணம், அவர்கள் வந்த விமானத்தின் வால் பகுதியில் இடம் பெற்றிருந்த இரண்டு புகைப்படங்கள். அதில் ஒன்று ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இறந்த இளம் பெண் மாஷா அமினியின் புகைப்படம். இன்னொன்று ஈரானிய கால்பந்தாட்ட வீரர் அமீர் நாசர் அசாதனியின் புகைப்படம். இவர் மாஷா அமினிக்கு நீதிகோரி நடந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
இவர்கள் இருவரின் புகைப்படமும் அந்த விமானத்தின் வால் பகுதியின் இரண்டு புறங்களில் இடம்பெற்றிருந்தன. அவை கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. கூடவே விமானத்தில் ஒரு நீண்ட வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில், “எந்த ஒரு பெண்ணையும் அவர் அவருடைய தலையை துணியால் மூடச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது. அதேபோல் எந்த ஒரு ஆணும் இதை வலியுறுத்துவதற்காக தூக்கிலிடப்படக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் பிரேசில் கால்பந்து மகளிர் அணியினர் வந்த விமானம் சர்வதேச கவனம் பெறக் காரணமாக அமைந்துள்ளது.
யார் இந்த மாஷா அமினி? ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுவர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். அதனைக் கண்டித்து மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அதனைக் கட்டுப்படுத்த சிறைத் தண்டனைகள், மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகவும், அதில் பெரும்பாலான தண்டனைகள் ஈரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டவை என்றும் அண்மையில் ஒரு மனித உரிமைகள் சார் அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ( வாசிக்க: 6 மாதங்களில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்: அதிர்ச்சி ரிப்போர்ட் )
இத்தகைய சூழலில் பிரேசில் மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் வந்த விமானத்தின் போஸ்டரும், வாசகமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.