உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா பங்களிக்க முடியும்: உக்ரைனுக்கான அமெரிக்க தூதர்!!
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா பங்களிக்க முடியும் என்று உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க், இந்திய பத்திரிகையாளர்கள் சிலருடன் ஆன்லைனில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “உக்ரைனில் தலைநகர் கீவ்-ல் இருக்கும் நான், போரின் பேரழிவுகளையும், உக்ரேனிய மக்களின் வலிமை மற்றும் பின்னடைவு ஆகிய இரண்டையும் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறேன். சர்வதேச தலைமை வகிக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தையும், “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற அதன் G20 கருப்பொருளையும் அர்த்தப்படுத்த வேண்டுமானால் அமைதி மிகவும் முக்கியம்.
உலகப் பொருளாதாரத்தின் மீதும், உணவுப் பாதுகாப்பின் மீதும் இந்த போர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதோடு, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கைகள் மீதும் இந்த போர் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. G20 அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் இந்தியாவுக்கு, உக்ரைன் போர் போன்ற உலகளாவிய பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கிருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை இந்தியா இன்னும் கண்டிக்கவில்லை. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மோதலை தீர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி உஸ்பெக் நாட்டின் சமர்கண்ட் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடந்த இருதரப்பு சந்திப்பின்போது, “இது போருக்கான காலம் அல்ல” எனக்கூறி மோதலை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய தலைவரைத் தூண்டினார். பிரதமர் மோடி கூறியது போல், இது போருக்கான காலம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உக்ரைன் தனது சுதந்திரத்தையும் அதன் இறையாண்மையையும் பாதுகாக்க மிகவும் பயங்கரமான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏராளமான உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இந்த போரின் விளைவுகள் உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை.
ஐநா சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு ஜனநாயக நாட்டிற்கும் பங்கு உண்டு. ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை இந்திய மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இந்திய தலைவர்கள் இந்த அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி பேசி இருக்கிறார்கள். போரால் ஏற்பட்டு வரும் உலகளாவிய தாக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வுகளைத் தேடுவதற்கு எல்லா இடங்களிலும் உள்ள தலைவர்களை இந்தியா ஊக்குவிக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் உலகளாவிய ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான இந்தியாவின் இதுவரையிலான முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
ஜி20 மற்றும் குவாட் அமைப்புகள் மூலம் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சர்வதேச அளவில் பலதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதிலும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கை நிலைநிறுத்துவதிலும் இந்தியாவின் அயராத தலைமைத்துவத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உலகெங்கிலும் உள்ள மக்களும் ஜனநாயக நாடுகளும் நிம்மதியாக, செழிப்பாக, சுதந்திரமாக இருப்பதை உறுதிப்படுத்த இந்தியா உதவுகிறது.” இவ்வாறு உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க் தெரிவித்தார்.