;
Athirady Tamil News

முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட வேண்டும் !!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்.

இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.

13ம் திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்கு தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13ம் திருத்த அதிகார பகிர்வு சட்டதையும், 16ம் திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும்.

அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்து போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்து போய் கொண்டிருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்பி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த. சித்தார்த்தன் எம்பி ஆகியோர், கனடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் வலியுறுத்தி கூறியுள்ளனர்.

கனடா இல்லத்தில் இன்று நிகழ்ந்த இந்த சந்திப்பில், இலங்கைக்கான கனடிய தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனடிய தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி விடுத்துள்ள டுவீட்டர் பதிவில், “பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகார பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனடிய தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனடிய தூதுவரிடமும், இந்நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு என தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசாங்கத்தையும் தாம் எதிர்த்து போராடுவோம் என கூறினர்.

தமது அபிலாசைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதை போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்து கூறுவதிலும் சலிப்படைந்து வருகிறார்கள் என்ற தமிழ் தலைவர்கள் இன்று கூறியதை தாம் புரிந்து கொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனடிய தரப்பினர் தம்மை சந்தித்த கட்சி தலைவர்களிடம் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.