பழிக்குப்பழி- பாதுகாப்பு அச்சுறுத்தலால் பின்லாந்து தூதரகத்தை மூடிய ரஷியா!!
ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்ப்பதாக கூறி ஒன்பது ரஷிய தூதர்களை ஃபின்லாந்து அரசு வெளியேற்றியது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஏற்கனவே ஒரு தூதரகம் மூடிய நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஃபின்லாந்து தூதரகத்தையும் மூட ரஷியா முடிவு செய்துள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.
இதுகுறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேட்டோவில் ஃபின்லாந்து இணைந்தது குறித்து விவாதிக்கப்பட்ட அளவுருக்கள் ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் உக்ரைன் ஆட்சியை போருக்குச் செல்ல ஊக்குவிப்பதும், மேற்கத்திய ஆயுதங்களால் அதை செலுத்துவதும் நம் நாட்டிற்கு எதிரான தெளிவான விரோத நடவடிக்கைகளுக்கு சமம் ” என்று குறிப்பிட்டிருந்தது. ஃபின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, இந்த நடவடிக்கைகள் ஃபின்லாந்தின் வெளியேற்ற முடிவுகளுக்கு கடுமையான மற்றும் சமச்சீரற்ற பதில் ஆகும் என்றும் இதற்கு பதிலடியாக துர்குவில் உள்ள ரஷிய தூதரகத்தை மூடுவதற்கு பின்லாந்து தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.