;
Athirady Tamil News

அறிமுகமானதுமே 3 கோடி பயனர்களை பெற்ற த்ரெட்ஸ்: ட்விட்டரை விட பெரிதாக வளருமா?!!

0

ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில் முதல் 7 மணி நேரங்களில் ஒரு கோடி பயனர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். தற்போது 3 கோடி பயனர்களை கடந்து அதிகரித்து வருகிறது.

தொழிலதிபர் ஈலோன் மஸ்க் மூலம் கடந்த அக்டோபர் மாதம் வாங்கப்பட்ட ட்விட்டர் சமூக ஊடகத்துக்கு `நட்பு` ரீதியிலான போட்டியாக த்ரெட்ஸ் இருக்கும் என்றும் சக்கர்பெர்க் குறிப்பிட்டார்.

ட்விட்டரில் சமூக காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மாறுபாடுகள் காரணமாக அதிருப்தியில் இருக்கும் பயனர்களை த்ரெட்ஸ் ஈர்க்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

த்ரெட்ஸில் பயனர்கள் தாங்கள் விரும்பும் கருத்துகளை 500 வார்த்தைகளில் பதிவிடமுடியும். அதேப்போல் ட்விட்டரில் உள்ள பல்வேறு அம்சங்களையும் த்ரெட்ஸும் கொண்டுள்ளது.

இந்த தளத்தை பயனர்களுக்கு ஏற்றவாறு வைத்திருப்பது அதன் வெற்றிக்கு முக்கியமாக இருக்கும் என்று சக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

எனினும் ஈலோன் மஸ்க் இது குறித்து கூறும்போது, இன்ஸ்டாகிராமில் போலியான மகிழ்ச்சியில் ஈடுபடுவதை விட ட்விட்டரில் அந்நியர்களால் தாக்குதலுக்கு உள்ளாவது மேலானது என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்விட்டர் உரிமையாளர் ஈலோன் மஸ்க் – மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இடையே நீடிக்கும் போட்டியின் அடுத்தக்கட்டமாக த்ரெட்ஸ் பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் இருவரும் நேரடியாக மோதிக் கொள்ள தயார் என்று கூறியிருந்தார்கள். உண்மையிலேயே அதனை நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களா என்பது தெரியவில்லை.

ட்விட்டரை விட த்ரெட்ஸ் மிகப்பெரியதாக இருக்குமா என்று மார்க் சக்கர்பெர்க்கிடம் கேள்வி எழுப்பியபோது, “ இதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஆனால் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் பொது உரையாடலுடன் கூடிய செயலி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ட்விட்டருக்கு இதைச் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதைச் செய்யவில்லை. நாங்கள் செய்வோம் என்று நம்புகிறோம்” என்றார்.

செயலி பயன்படுத்தும் டேட்டாவின் அளவு தொடர்பாக போட்டியாளர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆப்பிள் ஆப் ஸ்டோரின்படி, பயனர்களின் அடையாளங்களுடன் இணைக்கப்பட்ட ஆரோக்கியம், நிதி மற்றும் தேடுதல் தரவு ஆகியவை இதில் அடங்கும்.

இதேபோல், த்ரெட்ஸ் கணக்குடன் இணைந்த இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்காமல் த்ரெட்ஸ் கணக்கை நீக்கம் செய்ய முடியவில்லை என்றும் சில பயனர்கள் அசௌகரியத்தை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மெட்டா, “தற்போதைய சூழலில் உங்களின் இன்ஸ்டா கணக்கை நீக்காமல் த்ரெட்ஸ் கணக்கை நீக்க முடியாது. இதனை சரி செய்வது தொடர்பாக வேலை செய்து வருகிறோம். எனினும், உங்கள் த்ரெட்ஸ் கணக்கை எப்போது வேண்டுமானாலும் டிஆக்டிவேட் செய்யலாம்.

உங்கள் த்ரெட்ஸ் கணக்கை டிஆக்டிவேட் செய்வதன் மூலம் உங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு டிஆக்டிவேட் ஆகாது” என்று தெரிவித்தது.

த்ரெட்ஸ் தகவல்களை இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது நீக்கவும் செய்யலாம் என்றும் மெட்டா குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போது த்ரெட்ஸ் சமூக ஊடகத்தை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் ஒழுங்குமுறை கவலைகள் காரணமாக இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இது அறிமுகப்படுத்தப்படவில்லை.

த்ரெட்ஸ் தகவல்களை இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது நீக்கவும் செய்யலாம் என்று மெட்டா குறிப்பிட்டுள்ளது
தொடக்கக் கால பதிப்பு

தற்போதைய த்ரெட்ஸ் என்பது ஒரு தொடக்கக் கால பதிப்பு மட்டுமே. கூடுதல் அம்சங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் எதை சிறப்பாக செய்கிறதோ அதை எழுத்திலும் விரிவுப்படுத்துவதே த்ரெட்ஸ் தொடர்பாக எங்களின் நோக்கம் என்று இந்த செயலியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக மெட்டா கூறியிருந்தது.

த்ரெட்ஸ் தனித்து செயல்படக் கூடிய செயலியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமே அதனுள் பயனர்கள் நுழைகின்றனர். இன்ஸ்டாகிராம் பயனர் பெயர்தான் அதிலும் வருகிறது. எனினும், தங்களின் கணக்கை நிர்வகிக்கவும் வசதிகள் உள்ளன.

இன்ஸ்டாகிராமில் உங்களின் கணக்கை பிரைவேட்டாகவும் த்ரெட்ஸில் பொதுவாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

மெட்டாவின் வர்த்தக செயல்பாடுகள் தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்த செயலி அறிமுகமாகியுள்ளது.

கடந்த ஆண்டு மெட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஃபிரான்சஸ் ஹவ்ஜென், மெட்டா பாதுகாப்பை விட லாபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தது.

இதேபோல், மூன்றாம் தரப்பினர் தனது ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை பெறவும் மெட்டா அனுமதித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.

திங்களன்று இந்த கடந்த கால சர்ச்சைகள் குறித்து ஈலோன் மஸ்க் , `நல்லவேளை, அவர்கள் நேர்மையாக இயங்குகிறார்கள்` என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

ட்விட்டருக்கு மாற்றாக ப்ளூஸ்கை, மாஸ்டோடான், கூக்கு என பல செயலிகள் அறிமுகமானாலும் பயனர்களை ஈர்க்க அவை தவித்து வருகின்றன.

பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமுடன் தொடர்புடையதாக இருப்பதால் த்ரெட்ஸுக்கு ஏராளமான சாதகங்கள் உள்ளன.

மெட்டாவின் வர்த்தக செயல்பாடுகள் தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்த செயலி அறிமுகமாகியுள்ளது.
த்ரெட்ஸ் எப்படி செயல்படுகிறது?

த்ரெட்ஸில் பதிவிடப்படும் பதிவுகளை இன்ஸ்டாகிராமிலும் பகிரலாம். லிங்க்கள், புகைப்படங்கள், 5 நிமிடங்கள் வரையிலான வீடியோக்கள் போன்றவற்றை பகிரலாம்.

அதேநேரத்தில், புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும்போது சில பிரச்னைகள் ஏற்பட்டதாக செயலி அறிமுகமான உடனேயே அதனை பயன்படுத்திய பயனர்களில் சிலர் கூறினர்.

தாங்கள் பின்பற்றும் நபர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவைகளின் த்ரெட்ஸ்கள் குறித்து பயனர்கள் பார்க்க முடிகிறது. தங்களின் பெயரை யார் குறிப்பிட முடியும், குறிப்பிட்ட சொற்களை உள்ளடைக்கிய பதிவுகளுக்கான பதில்களை கட்டுப்படுத்துவது போன்றவைகளையும் பயனர்களால் நிர்வகிக்க முடியும்.

பிற கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்திக்கொள்வது, பிளாக் செய்வது, கட்டுப்படுத்துவது, புகாரளிப்பது போன்றவற்றையும் பயனர்கள் செய்ய முடியும்.

ட்விட்டர் பயனர்களுக்கு ஈலோன் மஸ்க் கட்டுப்பாடுகளை அறிவித்த பின்னர், ப்ளூஸ்கை(Blusky) செயலியில் பயனர்களின் செயல்பாடு சாதனை அளவை எட்டியிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், ட்விட்டருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக த்ரெட்ஸ் உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.

மற்ற நிறுவனங்களின் யோசனைகளை வாங்கி அதனை மேம்படுத்தி வெற்றி பெறுவதில் மார்க் ஜூக்கர்பெர்க் கைதேர்ந்தவர் என்பதை வரலாறு காட்டுகிறது.

மெட்டா நிறுவனத்தின் ரீல்ஸ் என்பது டிக்டாக் செயலியின் நகல் என்பது போல ஸ்நாப்சாட்டின் அப்பட்டமான நகலே ஸ்டோரிஸ் என்றும் பரவலாக கருதப்படுகிறது.

ட்விட்டருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு மெட்டா நிறுவனத்திற்கு ஆதார வளம் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் ஒரு பகுதியாகவே த்ரெட்ஸ் இருக்கும். ஆகவே, இது பல கோடி பயனர்களுடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கும். ஆகவே, இது பூஜ்யத்தில் இருந்து தொடங்கப்படப் போவதில்லை. ட்விட்டருக்குப் போட்டியாக அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற செயலிகள் அந்த நிலையில்தான் இருந்தன.

பேச்சுரிமைக்கு குரல் கொடுத்தமைக்காக ஈலோன் மஸ்க் அண்மையில் புகழப்பட்டாலும், ட்விட்டரில் அவரது செயல்பாடுகள் அதற்கு மாறாகவே உள்ளன.

ட்விட்டரின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த பயனர்களை இழுப்பதன் மூலம் ட்விட்டருக்கு சரியான மாற்றாக த்ரெட்ஸை உருவெடுக்கச் செய்ய முடியும் என்று ஜூக்கர்பெர்க் நம்புவதாக தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.