பிரதமர் மோடியின் தெலுங்கானா நிகழ்ச்சியை புறக்கணிக்கும் கே.சி.ஆர்!!
பிரதமர் மோடி நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ.6100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடியின் இந்நிகழ்ச்சிக்கு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கு கேசிஆர் கலந்துக் கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை கேசிஆர் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல. இதுகுறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராம்சந்தர் ராவ் கூறுகையில், ” பிரதமர் நரேந்திர மோடி 14 மாதங்களில் 5 முறை தெலுங்கானா வந்துள்ளார். ஆனால், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு முறை கூட அவரை வரவேற்க வந்ததில்லை. தெலுங்கானா முதல்வர் அந்தஸ்துக்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை. மாநிலத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் மு.க. ஸ்டாலின் போன்ற முதல்வர்களும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கொள்கிறார்கள்.
அவர்கள் இருவரும் பணிவுடன் உள்ளனர். பிஜேபியை அரசியல் ரீதியாக எதிர்த்தாலும், நெறிமுறையின்படி பிரதமர் மோடியை வரவேற்கின்றனர். முன்பு ராஜீவ் காந்திக்கும், என்டிஆருக்கும் இடையே கசப்பான அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தும், என்.டி.ராமாராவ் ராஜீவ் காந்தியை வரவேற்க வந்தார். ஜனநாயகத்திற்குத் தேவையான அரசியல் கலாச்சாரம் அதுதான். இன்று முதல்வரின் நடத்தை வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. தெலுங்கானா மக்கள் முதல்வர் கே.சி.ஆரால் அவமதிக்கப்படுகிறார்கள். தெலுங்கானா மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்” என்றார்.