சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை அவசியம் !!
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை வியாழக்கிழமை (07) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர். இதன் போது கருத்துரைத்த சுமந்திரன்,
“இந்த அகழ்வு நடவடிக்கை குறித்த முறைப்படி செய்யப்படுவதாக தெரியவில்லை. எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சர்வதேச நியதிகள் உள்ளன. அந்த நியதிகள் எதுவும் இங்கு பின்பற்றப்படுவதாக தெரியவில்லை” என்றார்.
“ஒரு புதைகுழியில் ஒரு மனித உடலினை தோண்டியெடுத்து செய்கின்ற பரிசோதனைக்கும் பல உடலங்கள் உள்ள மனித புதைகுழியாக இருக்கின்ற ஒரு பகுதி தோண்டப்பட்டு எடுப்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதனை செய்வதற்காக சர்வதேச நியதிகள் ஏராளமாக இருக்கின்றன” என்றார். .
“நிலைமைகளை அவதானிக்கும் போது, இதில் இருந்து உண்மையினை கண்டறிவதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான மனதில்லாமல் இருப்பதும் இன்னும் ஒருபடி மேல் சொன்னால் அவற்றை மூடி மறைப்பதும் தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது” என்றார்.
“இந்த இடத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற சான்று பொருட்கள் கூட கவனமாக பேணி பாதுகாக்கப்படவில்லை. இந்த இடத்தினை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்விக்குறியும் இருக்கின்றது.
நேரம் கடந்து செல்கின்றது. பொலிஸாரின் கையில் இதனை விடப்போகின்றார்களா எனக் கேட்ட அவர், வேலியே பயிரை மேய்ந்துவிடக்கூடாது. புலனாய்வாளர்கள் ஏராளமானவர்கள் இங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
“விடயத்தை மறைக்க நினைப்பவர்கள் அடுத்த நடவடிக்கைக்கு தயாராகின்றார்கள். ஆகையால் இது சரியான விதத்தில் பாதுகாக்கப்படவேண்டும். சரியான முறையில் சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் மேற்பார்வை உடனடியாக கொண்டுவரப்படவேண்டும்” என்றார்.