;
Athirady Tamil News

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலை!!

0

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பு, இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய்ச் சிலாகித்து வருகிறது. ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கும்போது திட்டத்தின் பொருத்தப்பாட்டை அறிந்துகொள்ள நீர் அடிச்சுவடு என்ற நீர்த் தேவையே சூழலியற் குறிகாட்டியாக முதலில் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

கரும்பினதும் சீனியினதும் நீர்அடிச்சுவடு மிகவும் உயர்வானது. ஒரு கிலோ கரும்பை உற்பத்தி செய்வதற்கு 210 லீற்றர் தண்ணீரும் ஒரு கிலோ சுத்திகரிக்கப்பட்ட சீனியை உற்பத்தி செய்வற்கு 1780 லீற்றர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கரும்பு வருடம் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டிய ஒரு பல்லாண்டுப் பயிருமாகும். இவற்றின் அடிப்படையில் பேராறுகள் எதுவுமே இல்லாத வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும்.

நீர்ச்சமநிலையைக் குழப்பி அத்தியாவசிய உணவுப்பயிர்களின் உற்பத்தியிலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஈற்றில் அம்மண்ணைப் பாலையாக்கியும் விடும்.

கரும்பு மிக அதிகளவில் இரசாயன உரங்களையும், பீடைகொல்லி – களைகொல்லி நஞ்சுகளையும் வேண்டி நிற்கும் ஒரு பயிர். தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களால் குளிப்பாட்டப்படும் மண்ணில் நுண்ணங்கிகள் அழிந்து தொடர்ந்து பயிரிடமுடியாதவாறு மண் மலடாகி விடுகிறது. கந்தளாய்ச் சீனித்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டிருப்பதற்குக் கரும்பில் இருந்து இனிமேலும் அதிக விளைச்சலைப் பெறமுடியாத அளவுக்கு நிலம் தரம் இழந்ததும் ஒரு காரணம். விவசாய இரசாயனங்கள் நீரோடு கலந்து குடிநீரையும் மாசடையச் செய்கிறது. வவுனியா ஏற்கனவே சிறுநீரக நோய்களின் ஆபத்து அதிகமாகவுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய இரசாயனங்கள் கலந்த குடிநீரை அருந்தியதால் ஏராளமானோர் சிறுநீரகங்கள் செயலிழந்து அவதிப்படுகின்றனர். இந்நிலையில் கரும்புச் செய்கை வவுனியாவின் நிலத்தினதும் மக்களினதும் ஆரோக்கியத்துக்குப் பெருங்கேடாகவே முடியும்.

கரும்புச் செய்கைக்கும் சீனித்தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்ட காணியின் அளவு வவுனியாவின் மொத்தப்பரப்பில் ஆறு விழுக்காடுக்கும் அதிகம். இந்தப் பாரிய இடத்தைக் காடுகளை அழித்தே பெறமுடியும். மக்கள் போரினால் இடம்பெயர்ந்ததன் காரணமாகக் கைவிடப்பட்ட மேயிச்சல் தரைகளையெல்லாம் அங்கு மரங்கள் வளர்ந்ததைக் காரணங்காட்டிக் காடுகள் என எல்லைகள் போட்ட வனவிலங்குத் திணைக்களம் இப்போது அதே காடுகளை கரும்புச் செய்கைக்கு விடுவிப்பதற்கு இணங்கியுள்ளது. காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படப்போகும் நாடுகளது பட்டியலில் இலங்கையும் அடங்கியுள்ள நிலையில் அதனைக் கருத்திற் கொள்ளாது காடுகளை அழித்து சீனித் தொழிற்சாலையை அமைப்பது குருட்டுத்தனமான முடிவாகும். இது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும்.

சீனித்தொழிற்சாலை சிங்களக் குடியேற்றத்துக்கும் வித்திடும் என்ற சந்தேகமும் உள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம் விவசாயத்தை மேம்படுத்தல் என்று சொல்லப்பட்டபோதும் அதன் உள்ளார்ந்த நோக்கம் சிங்களக் குடியேற்றமாகும். அதுவும், குடியேற்றப்படும் இடத்தின் இனவகிதாசாரப்படி இல்லாமல் இலங்கையின் இனவிகிதாசாரத்தின்படியே குடியேற்றங்களை மேற்கொள்வது மகாவலி அதிகார சபையின் எழுதப்படாத அதிகாரம். மகாவலியுடன் இணைக்கப்பட்ட கந்தளாய்க் குளத்தை மையப்படுத்தி நிகழ்ந்த பயிர்ச்செய்கையே தமிழ் நிலமான கந்தளாயை இன்று முற்றுமுழுதாக சிங்களவர்களின் நிலமாக்கியது. வவுனியாவிலும் கரும்புக்கு நீர்பாய்ச்சுகிறோம் என்று சொல்லி வவுனியாவின் குளங்களோடு மகாவலியைத் தொடுத்து நிலங்களை மகாவலி அதிகாரசபை தன்வசமாக்கலாம். மகாவலியில் நீர்வரத்து இருக்கிறதோ இல்லையோ இதனூடாகச் சிங்களக் குடியேற்றம் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் வாழ்வை மேம்படுத்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். ஆனால், வடக்கின் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது எவ்வித்திலும் பொருந்தாத சீனித் தொழிற்சாலையை வரவேற்பது அறிவுடையோரினதோ, தமிழ்த் தேசியப் பற்றாளர்களினதோ செயலாக இருக்காது. நீண்ட நெடிய வலிமிகுந்த தேசிய விடுதலை, போராட்டத்தை முன்னெடுத்த இனம் நாம். இப் போராட்டம் எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வுக்காக மண்ணிண் வளங்களைக் காப்பாற்றி அவர்களிடம் கையளிப்பதையும் உள்ளடக்கியதுதான். மண்மீட்கப் புறப்பட்ட நாம் அம்மண் பாலையாகுவதற்கோ மலடாகுவதற்கோ எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.