யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!!
யாழ்ப்பாணத்தில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார்.
கட்டணமானி பொருத்திய முச்சக்கர வண்டிகளுக்கு காவல்துறையினரால் விசேட முத்திரை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்க அதிபரின் தலைமையின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தி அதனை ஒழுங்கமைப்பது தொடர்பிலான முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் முக்கியமான சில முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருந்தது.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முதல் கட்டணமானி பொருத்தப்பட வேண்டிய முச்சக்கர வண்டிகள் அவற்றை பொருத்தி, காவல்துறையினர் மூலம் 20, 21, 22 ஆகிய தினங்களில் விசேட முத்திரை ஒட்டப்பட வேண்டும்.
முத்திரை ஒட்டப்பட்டதன் பின்பு தான் சட்டபூர்வமாக இங்குள்ள தரிப்பு நிலையங்களில் நின்று முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.
கட்டணமானி, விசேட முத்திரை இல்லாமல் ஓட்டப்படும் முச்சக்கர வண்டிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
நாளையிலிருந்து இருந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இருபதாம் திகதிக்கு பின்னர் சட்டபூர்வமாக இந்நடைமுறை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.