உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை சப்ளை செய்ய அமெரிக்கா முடிவு!!
ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ “கிளஸ்டர் குண்டுகள்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களில், ரஷியா கொத்து குண்டுகளை பயன்படுத்தினால் போர்க்குற்றம் என்று அமெரிக்கா குறிப்பிட்டது. இந்த குண்டுகளை பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் நேட்டோவின் முன்னணி நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் தற்போதைய இந்த நடவடிக்கை அமெரிக்காவை அந்த உடன்படிக்கையில் இருந்து வேறுபடுத்துகிறது. 2008ம் வருடம் கையெழுத்திடப்பட்ட கிளஸ்டர் குண்டுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின்படி, அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துதல், கையிருப்பு வைத்தல், மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்த சந்திப்பின் முடிவில் இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ரஷிய-உக்ரைன் போரின் தொடக்க காலங்களில், ரஷியா கிளஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்துவதை குறித்து கேட்டபோது, வெள்ளை மாளிகை, “நாங்கள் அத்தகைய அறிக்கைகளைப் பார்த்தோம். அவை உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ஒரு போர்க் குற்றமாக கருதப்படும்” என தெரிவித்திருந்தது. நேற்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்கிற அமைப்பின் ஆயுதங்களுக்கான இயக்குனர் மேரி வேர்ஹாம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் “ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே கிளஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்துவதால் அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர். இரு தரப்பினரும் கண்மூடித்தனமாக ஆயுதங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும் இந்த ஆயுதங்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்களை நெருங்கும் நிலையில், இந்த ஆயுதங்களுக்கான தேவை வலுத்திருப்பதாக கூறி அவற்றை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்றபோது, இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என 100 நாடுகள் கையொப்பமிட்டன.
ஆனால் இவற்றால் ஆபத்து அதிகம் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகியவை இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) அளித்த தகவல்களின்படி, மிகவும் ஆபத்தான இந்த கிளஸ்டர் வெடிகுண்டுகள், காற்றில் உடைந்து பல குண்டுகளை பரந்த பகுதிகளில் வெளியிடும். கொத்து குண்டுகளை விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு நாடு தனது எதிரி நாடுகளின் மீது வீசி தாக்குதல் நடத்த முடியும்.