;
Athirady Tamil News

வெள்ளை மாளிகையில் கோகைன் கண்டுபிடிப்பு: பைடன் மற்றும் அவர் மகன் மீது டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு!!

0

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு வந்து கண்டெடுத்த பொருள் குறித்து சோதனை நடத்தினர். இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், “இவை தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்குத்தான்” என குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து டிரம்ப், தனது “டிரூத் சோஷியல்” சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க அதிபரின் பிரத்யேக அலுவலகமான ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகைன், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்காக இல்லாமல் வேறு யாருக்கோ என எவ்வாறு நம்புவது? ஆனால், போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க, ‘கிடைத்தது மிக குறைந்த அளவு’ என்றோ அல்லது ‘அது கோகைன் அல்ல, ஆஸ்பிரின்’ என்றோ கூறத் தொடங்கி விடும். என்னை வெறுக்கும் அரசு வக்கீல் ஜாக் ஸ்மித், கோகைன் கண்டெடுத்த பகுதியில் காணப்பட்டாரா?” என பதிவிட்டுள்ளார். கோகைன் கண்டுபிடிக்கப்பட்டபோது பைடன் வார இறுதி விடுமுறைக்காக கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க அதிபருக்கான தங்குமிடத்தில் இருந்தார்.

ஊடகவியலாளர்களுடன் உரையாடிய வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், “அமெரிக்க அதிபர் இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும் என நினைக்கிறார். இப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் (வெஸ்ட் விங்), பெரிதும் மக்கள் பயணிக்கும் பகுதி. அங்கு பல வெள்ளை மாளிகை பார்வையாளர்கள் வருகிறார்கள். இது குறித்து இதற்கு மேல் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் தகவல் இல்லை. விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் குறித்த உண்மைகளை அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள் என வெள்ளை மாளிகை நம்புகிறது” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.